Monday, December 27, 2010

ஒரு லட்சியவாதியின் காதல் கதை - அத்யாயம்-11


ஊருக்கு புறப்பட்டேன் அன்றிரவே. மறுநாள் காலை வழியில் பார்த்தவர்கள் எல்லாம் நலம் விசாரிக்க, அவர்களிடம் சிறு நேரம் பேசிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். என்னை கண்டதும் என் அம்மா, களைந்துக் கொண்டிருந்த அரிசி பத்திரத்தை அப்படியே கீழே வைத்து விட்டு, ஓடி வந்து தன் இரு கைகளையும் என் முகத்தில் வைத்து, பின் தன் தலையில் கையை அழுத்தி திருஷ்டி எடுத்தபின் என் கையை பிடித்து "வாய்யா... வா... உக்காரு.. உன்ன பாத்து எம்புட்டு நாள் ஆச்சு. எப்படியா இருக்க?? பரிச்ச எல்லாம் நல்ல எழுதுனியா??" என்று கேட்டுக்கொண்டே என்னை கட்டிலில் அமரச்செய்தார். "நல்லா இருக்கேன் ஆத்தா.. பாத்தா தெரியலையா??? பரிட்சையும் நல்ல எழுதிருக்கேன்."

"ரொம்ப சந்தோசம் யா... சரி.. நீ போய் சட்ட துணி மாத்திக்க.. நான் போய் காப்பி தண்ணி வெக்கறேன்." என்று கூறி அம்மா சமையலறைக்குள் புத்துணர்வுடன் புகுந்து அடுப்பினை பற்ற வைக்க, நான் அங்கு சென்று "அய்யன் எங்க ஆத்தா???" என்று கேட்க, அம்மா பதில் சொல்ல வாய் எடுக்கும் முன்னே, "தம்பி, எப்படா வந்த??" என்றார் என் அப்பா குளித்துவிட்டு வந்து தலையை துவட்டியபடியே.

"இப்ப தான் அய்யா. 9.45 பஸ்ல வந்தேன்." என்றதும் அப்பா அம்மாவை பார்த்து, "ஏய்.!! புள்ளைக்கு டிபன் வெய்.. சாப்படட்டும் மொதல்ல..." என்று சொல்ல "இந்த காப்பி தண்ணிய குடிக்கட்டும். இட்லி வேகுது, 10 நிமிஷத்துல டிபன் வெச்சர்றேன்."

நான் குளித்துவிட்டு வர; இட்லியும், அம்மியில் அரைத்த புதினா சட்டினியும் தயாராக இருந்தது. விடுதி உணவை உண்டு சலித்துப்போன எனக்கு அம்மாவின் கை சமையல் மேலும் பசியை தூண்டியது. நானும் அப்பாவும் சாப்பிட அமர்ந்தோம். "ஏன் தம்பி. பரிட்சை எப்படி எழுதுன?? உடனே வேலை கெடச்சுடுமா???" என்றார் அப்பா சாப்பிட்டுக்கொண்டே.

"exam நல்லா எழுதிருக்கேன். 1 மாசத்துல result வந்திடும். காலேஜ்லயே 1st வருவேன்ய்யா.. புரட்டாசி மாசம் மெட்ராசுல வேலைக்கு ஆள் எடுப்பாங்க. அப்ப வேலை கெடச்சிடும். மார்கழி மாசம் வேலைக்கு சேரனும் அமெரிக்கா ."

"எப்படியோ அய்யன் கஷ்டப்பட்டு உன்ன படிக்க வெச்சுது. நீயும் நல்லா படிச்சு ஒரு நல்லா நெலைக்கு வந்துட்ட. நீ நல்லா இருக்கனும்ய்யா.. அதுதேன் எங்க ஆச." என்று கண்கலங்கிக்கொண்டே கூறும் அம்மாவின் பாசமும், "அட... இவ ஒருத்தி.. புள்ள இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்திருக்கு. அவன் முன்னாடி கண்ண கசக்கிட்டு. நீ சாப்புடு யா.. புள்ள எளச்சுக் கெடக்கான். பையனுக்கு இன்னும் 2 இட்லி வெய்.. " என்று கூறும் அப்பாவின் அக்கறையும், என்னை கண்கலங்கச் செய்தாலும், அவர்களுடன் இருப்பது எனக்கு எப்போதும் நிறைவையும் பெருமையையும் தந்தது. அவர்களை கண்ட ஆனந்தத்தில் அன்றைய பொழுது போனதே தெரியவில்லை.

மறுநாள், அப்பாவுடன் வயலுக்கு சென்றேன். நானும் சற்று உதவலாமே அவருக்கு என்று வயலில் கால் வைக்க, "தம்பி, நீ ஏன்ப்பா வயல்ல எறங்குற? அது என்னோட போகட்டும்னு தான உன்ன படிக்க வெச்சேன். போய் அங்கிட்டு உக்காருய்யா... படிச்ச புள்ள எதுக்கு வயல்லயும், வெயில்லயும் கஷ்டபட்டுகிட்டு.." என்றார். அவருக்கு என்மேல் இருந்த பாசம் தான் எத்தனை எத்தனை...

"அட.. என்ன அய்யா இப்படி சொல்லிட்டிங்க.. இந்த விவசாயம் தான என்ன படிக்க வெச்சிது. இந்த விவசாயம் தான நமக்கு சோறு போடுது.. நமக்கு மட்டும் இல்லாம, பலருக்கு பசிய போக்குது. இதுல என்ன கஷ்டம்??? படிச்சவங்க எல்லாம் வேலைக்கு போய்ட்ட, நாளைக்கு யாருய்யா விவசாயம் பாக்கறது. நான் நாசா போய் வேலை பாத்துட்டு கொஞ்சம் வருஷம் கழிச்சு, இங்க வந்து விவசாயம் தான் பாக்க போறேன்." என்று கூறி மம்பட்டியை எடுத்து நீர் பாய்ச்ச ஆரம்பித்தேன்.

"நீ சொல்றது சரி தான். இப்ப 10 ஆவது படிச்ச பசங்க கூட விவசாயம் பாக்க மாட்டேன்னு சொல்லுதுக. உங்க மாறி ஆளுங்க ஊருக்கு திரும்பி வந்து விவசாயம் பாத்தா தான் நாளைக்கு சாப்பாடு." என்று கூறிக்கொண்டே வயலின் மறுமுனையில் களையெடுக்க ஆரம்பித்தார்.

வயலில் வேலைசெய்த களைப்பு. அன்று இரவு நிம்மதியான உறக்கம். இந்த இரண்டு நாளில் சந்தியாவின் நினைவே இல்லை. மூன்றாம் நாள் அவளது நினைவு மெல்ல என் மனதை எட்டிப்பார்த்தது. சந்தியாவிடம் பேச வேண்டும் என்று மனம் துடித்தது. அவளது வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்து பேசினேன். பேசும் நேரம் கூட தெரியாமல் வெகு நேரம் பேசிவிட்டோம். இது தினமும் தொடர்ந்தது. அவ்வப்போது அருணிடமும் பேச நான் தவறுவது இல்லை. இப்படியாக சில வாரங்கள் ஓடின.

செப்டம்பர் மாதம் வந்தது. நாசா நேர்முகத்தேர்வுக்கு தயாராக வேண்டி இருந்தது. அதற்காக சென்னை செல்ல தயார் ஆனேன். மாணிக்கவாசகர் அய்யா வீட்டிற்கு சென்றேன் "அடடே... வா கிருஷ்ணா.. இப்ப தான் இந்த வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா???" என்று அவர் கேட்டதும் "அப்படி ஒன்னும் இல்ல அய்யா.. அப்பா கூட வயலுக்கு போய்ட்டேன். அதான் வந்து பாக்க முடியல.. தப்பா நெனச்சுக்காதீங்க.."

அய்யா எப்போதும் என்னை தன்மகனாகவே நினைத்தார். "அட.. உன்ன ஏன்ப்பா தப்பா நெனைக்கபோறேன். நீ என் புள்ள டா.. சரி.. எப்ப நாசா interview??"

"அய்யா... இந்த மாசம் 28 ஆம் தேதி சென்னைல நடக்குது. அதான் இப்பவே கெளம்பிட்டேன். போய் கொஞ்சம் படிக்கணும்." என்ற என் அருகே வந்து அய்யா என் தோளை தட்டி "நீ படிக்க என்னடா இருக்கு.. போ.. போய் சீக்கரம் நல்ல சேதி சொல்லு." என்றார்.

அய்யாவின் காலில் விழுந்து ஆசி பெற "நல்லா இருப்பா..!! நீ பட்ட கஷ்டம் எல்லாம் காணாம போச்சு. நீ ரொம்ப நல்ல நிலைக்கு வருவ" என்று கூறி தன் சட்டை பையில் இருந்து 500 ரூபாய் எடுத்து எனக்கு கொடுத்தார்.

"அய்யா.. இது எதுக்குய்யா.. உங்க அன்பே போதும் எனக்கு!!" என்ற என்னைப் பார்த்து "அட போடா... கை செலவுக்கு வெச்சிக்க..." என்று செல்லமாக என் கன்னத்தை தட்டினார். அங்கிருந்து வரும் வழியில் சந்தியாவிற்க்கும், அருணுக்கும், நான் வரும் தகவலை தொலைப்பேசியில் தெரிவித்து விட்டு வீட்டிற்கு வந்தேன்.

தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டு, புறப்பட தயார் ஆனேன். "ஏன்ய்யா... முறுக்கும், அதிரசமும் வெச்சிருக்கேன். சப்புட்டுக்கோ. இந்தா..... இந்த பணத்த கை செலவுக்கு வெச்சிக்க. நல்லபடியா போய் பரிட்சை எழுதுப்பா. ஊருக்கு போயிட்டு சாவித்ரி வீட்டுக்கு போன் போடு. நான் உன் போனுக்காக காத்துக் கெடப்பேன்ய்யா..." என்று கூறும் போது அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருகிற்று. "போன் பண்றேன் ஆத்தா. நீ கவலை படாம இரு" என்று ஆறுதல் கூறினேன்.

"காசு பணம் வேணும்னா போன் பண்ணு ராசா. அய்யன், ஆத்தாளுக்கு கஷ்டம்னு நெனச்சு வெறும் வயிறா கெடைக்காதய்யா.. என் நெனப்பு முச்சூடும் உன் மேல தானப்பா இருக்கும்" என்று கண் கலங்கிக் கொண்டிருந்த அம்மாவை பார்த்து அப்பா "ஏய்.. கிறுக்கு கழுத.. புள்ள ஊருக்கு போற நேரம் ஏன் அழுதுட்டு இருக்கவ. அவன் எல்லாம் பாத்துக்குவான். நான் போய் பஸ் வெச்சு விட்டுட்டு வாறேன்."

என் பெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு, என் தோளில் ஒரு கை வைத்து அணைத்த படி, நடந்துகொண்டே அப்பா "தம்பி..!! மெட்ராசு பெரிய ஊரு. நல்லவங்களும் இருப்பாங்க, கெட்டவங்களும் இருப்பாங்க. பாத்து சூதானமா இருந்துக்க. ஆமா..... யாரு தம்பி அது??? தெனம் நீ நம்ம முருகன் கடைல இருந்து ஒரு பொண்ணுக்கு போன் பண்றியாம். முருகன் சொன்னான்."

"வேலை கெடச்சதும் நானே சொல்லனும்னு நெனச்சேன். நீங்க கேட்டதுனால இப்பவே சொல்றேன். என் கூட படிச்ச புள்ளய்யா.. பாசக்கார புள்ள. என் மேல உசுரயே வெச்சிருக்கு. நானும்.........." என்று இழுத்தேன்.

"உனக்கு தெரியாததா தம்பி??? இங்க இருக்கறவங்க பத்தாவது கூட ஒழுங்கா முடிக்கல. ஆனா நீ, ஆச பட்ட படிப்புக்காகவும், வேலைக்காகவும் எப்படி கஷ்டப்பட்டனு தான் எனக்கு நல்லா தெரியுமே. நீ எத செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும். எங்கள விட படிப்புலையும், அறிவுலையும் நீ ஒசந்துக் கெடக்க.. நீ தப்பா எதையும் செய்யமாட்ட. கவல படாம போய்யா.. வேலை கெடச்சதும் எல்லாம் உன் ஆசப்படி பேசி முடிச்சிக்கலாம்." என்று கூறிய அப்பாவை வியந்து பார்த்தேன். என் மேல் அப்படி ஒரு நம்பிக்கை அவருக்கு.

"போய்யா... போ... வேலை கெடச்சதும் தகவல் சொல்லு" என்று கூறி என் சட்டை பையில் பணத்தை திணித்தார். பேருந்தில் ஏறி சென்னை புறப்பட்டேன்.

தொடரும் நேர்முகத் தேர்வுக்கான ஆயத்தம்.


என்றும் அன்புடன்,
இராஜராஜன்

1 comment: