Sunday, March 6, 2011

ஒரு தந்தையின் தாலாட்டு (ஒரு கணவனின் ஒப்பாரி)

ஒரு தந்தையின் தாலாட்டு (ஒரு கணவனின் ஒப்பாரி)

பத்திரமா பாத்துக்கனு
பெத்த மகன் தூங்கயிலே,
சத்தியத்த வாங்கிகிட்டு
போனதெங்க மரிகொழுந்தே??

கை புடிச்ச நாள் முதலா
கை நீட்டி அடிச்சேனா??
கண்மணியே உன்னத்தான்
கண்கலங்க வெச்சேனா??
நட்ட நாடு வீதியிலே - என்ன
மொட்ட மரமாக்கிப்புட்டு,
கட்டழகி காத்தோட
கலந்துத்தான் போனதெங்க??


காசு பணம் கேட்டுத்தான்
கல்யாணம் பண்ணேனா??
சொத்தெழுதி வைக்க சொல்லி
சண்டை தான் போட்டேனா??

அத்தமக உன்ன கட்ட
ஒத்தக்காலில் நின்ன என்ன,
ஒத்தயில விட்டுப்புட்டு
போனதெங்க சென்பகமே??


வெட்டருவா தூக்கிகிட்டு
வெட்டிவம்பு தேடயிலே,
கெட்டதெல்லாம் விட்டுவிட
வேணுமுன்னு சொன்னவளே,
விட்டுப்புட்டு நான் நிக்க - நீ
என்ன விட்டு போனதெங்க??


சொந்தபந்தம் சேர்ந்து வந்து
சேத்து வெச்ச சாயங்காலம்,
சத்தியமா சாகும் வரை
'உன்கூடதான்' னு சொன்னவளே,
அத 'உண்மை' னு காட்டிப்புட்டு
போனதெங்க கருவாச்சியே??


எத்தன நாள் தவமிருந்த
ஒத்த புள்ள 'வேணும்' னு,
நீ பெத்த புள்ள இங்கிருக்க
பெத்தவளே நீ எங்க??

நித்தமெல்லாம் ஆசையோட,
நெஞ்சமெல்லாம் பாசத்தோட,
நீ நட்ட மரம் பூத்திருக்க,
நட்டவளே நீ எங்க??


பட்ட பகல் மொத்தமும்
பாடுபட்ட வேளையிலும்,
கட்டழகி உன் நெனப்பால்
சூரியனும் சுட்டதில்ல..!!
என்ன ஒத்தையில விட்டுபுட்டு - நீ
நித்திரைக்கு போனபின்னே,
நட்டநடு ராத்திரியும்
சுட்டெறிக்குது மனசுக்குள்ள..!!


திருடித்தான் பொழச்சேனா
தடுமாறிப் போனேனே..!!
அடிச்சித்தான் பொழச்சேனா
ஆடிப்போய் நிக்கிறேனே..!!
ஊர் பசி ஆத்தத்தான்
விவசாயம் பாத்தேனே,
வளமும் சேரவில்ல..!!
வாழ்வும் செழிக்கவில்ல..!!


ஏன் இந்த 'ஜென்மம்' னு
ஆத்தோர அய்யனார,
பாத்ததுமே கேட்டுப்புட்டேன்,
காத்திருந்தும் பாத்துப்புட்டேன்,
பதிலும் கெடைக்கவில்ல..!!
வலியும் கொறையவில்ல..!!


மகனே..!!
என் செல்ல மகனே..!!
உலகாளப் பிறந்தவனே..!!
சீக்கிரமே தூங்கிவிடு..!!


நான் பெத்த மகராசா,
எனக்கு வாழப்புடிக்கலடா..!!


உன் தொந்தரவு இல்லைனா,
உன் தாயைப் போய் சேர்ந்திருப்பேன்..!!
அவ போன இடம் தெரிஞ்சிருந்தும் - நான்
போக வழி கெடைக்கலயே..!!


இத சொல்லி நான் அழுதா
உனக்கு தான் புரிஞ்சிடுமா??
எதுக்கு நீ 'அழுர' னு - நான்
சொல்லி தான் தெரியனுமா??


- கண்ணீர் துளிகளுடன்,
உன் அதிர்ஷ்ட்டமில்லா தந்தை.



என்றும் அன்புடன்,
இராஜராஜன்