Monday, January 17, 2011

அந்த ஒரு அரியர் பேப்பர் - சிறுகதை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையனா, சந்திரமுகி கிட்ட பேசிட்டு இருந்த நேரம். ஒட்டுமொத்த தியேட்டரும் அமைதியா இருந்துச்சு. பாதி பேர் சீட் நுனில உக்காந்து படம் பாத்திட்டு இருக்காங்க. "Excuse me boss.. you got a text message" னு என் செல் போன் சத்தம்.. தலைவர் ஸ்க்ரீன் ல பேசிட்டு இருக்கார். எஸ்எம்எஸ் ஆ முக்கியம் னு அத நான் கண்டுக்கவே இல்ல. அடுத்த 10 நொடில "beep" னு இன்னொரு செல் சத்தம். மறுபடியும் 2 நொடில "கடைசி வரைக்கும் வேல வேட்டிக்கே போகாம நாம வாழ்ந்து காட்டனும். இது தான் நம்ம லட்சியம்" னு வடிவேல் வின்னர் படத்துல சொல்ற டயலாக். இது நம்ம ரமேஷ் எஸ்எம்எஸ் டோன் ஆச்சே.!! எல்லோருக்கும் எஸ்எம்எஸ் வருதுன்னா.. நாங்க 35 பேர் class அ பங்க் அடிச்சதுனால காலேஜ் ல என்னமோ பிரச்சனை ஆயிடுச்சு போலனு ஒரு எண்ணம் என்ன படத்த பாக்கவே விடல. சரி என்னவா இருந்தாலும் அப்பறம் பாத்துக்கலாம் னு மறுபடியும் படத்துல மூழ்கிட்டேன்.

"டேய். என்ன தான் சொல்லு.. நம்ம தலைவர் "தலைவர்" தான்டா.. சும்மா அசத்தி இருக்கார்." னு தியேட்டர் படில இறங்கி வரும்போது சொல்லிகிட்டே வந்தான் கேசு (கேசவமூர்த்தி). "இந்த கூட்டத்துல எதுக்கு போய் பைக்க எடுத்துட்டு. கொஞ்ச நேரம் இங்கயே நிப்போம்" னு ரமேஷ் சொல்ல, அப்ப தான் எஸ்எம்எஸ் ஞாபகம் வந்துச்சு. யாரு அனுப்புனானு போன் அ எடுத்துப் பாத்தேன். "டேய் ரமேஷ். எனக்கு நம்ம "படிப்பு" பஞ்சாபி (பஞ்சாபிகேசன்) எஸ்எம்எஸ் அனுப்பி இருக்கான் டா.. ஆச்சர்யமா இருக்கு" னு சொல்லிட்டே எஸ்எம்எஸ் அ ஓப்பன் பண்ணுனா "One good news. One bad news" னு இருந்துச்சு. அத பாத்ததும் ஒன்னும் புரியல எனக்கு. "டேய்.. ரமேஷ். இந்த கிறுக்குப்பய என்ன அனுப்பி இருக்கான்னு பாரு" னு போன் அ குடுத்தேன். அத பாத்துட்டு, அவன் போன் அ எடுத்து எஸ்எம்எஸ் அ பாத்தா, அதுவும் பஞ்சாபி தான் அனுப்பி இருக்கான். ஆனா "Two good news" இருக்கு அதுல.

குமார் என்ன பாத்து ஓடி வந்து "முத்து.. revaluation ரிசல்ட் வந்திருச்சு டா.. அத தான் அந்த சனியன் அப்படி அனுப்பி இருக்கான். நான் இப்ப தான் அவன் கிட்ட போன்ல பேசுனேன். சாரி டா முத்து. நீ revaluation லயும் பெயில் டா. ரமேஷ், நீ பாஸ் ஆயிட்ட. அதுவும் ஜஸ்ட் பாஸ். எவனோ கருணை ல போட்டு இருக்கான் போல."

படம் பாத்த சந்தோஷம் ரிசல்ட்ட கேட்டதும் காணாம போச்சு.
"விடு டா. இந்த செமஸ்டர்ல சேத்து எழுதுனா போச்சு" னு ரமேஷ் ஆறுதல் சொல்ல "உனக்கென்ன..?? நீ பாஸ் ஆயிட்ட.. என்ன வேணும்னாலும் சொல்லுவ" னு அவன பாத்து ஒரு கடி கடிச்சேன். ரமேஷ் சொல்றதும் சரி தான். இப்ப பீல் பண்ணி என்ன பண்றது. அடுத்த செம்ல நல்லா படிச்சு, 80 மார்க் எடுப்பேன்னு எங்க குலதெய்வம் கருப்பசாமிக்கு மனசுக்குள்ளயே சத்தியம் செஞ்சேன்.

பெயில் ஆனது C-Programming பேப்பர். நமக்கு programming னாலே சமுத்திரம் படத்துல கவுண்டமணி செந்தில பாத்து பயப்படற மாறி. லேப் ல கம்ப்யூட்டர ஆண் பண்ண தெரியாம, ஏற்கனவே ஆண் ஆகி இருக்குற கம்ப்யூட்டர்ல போய் உக்காருவேன். கம்ப்யூட்டர்ல எனக்கு அவ்வளவு knowledge. இந்த பேப்பர்ல பாஸ் ஆக எங்க class பட்ட பாடு இருக்கே. அத சொல்லனும்னா, பரிச்சை எழுதுற 3 மணி நேரத்துக்கு மேல தான் ஆகும். கார்த்தி பிட்டு, குமார் மனப்பாடம், வினோத் color pen, sketch னு ஏதேதோ பண்ணி பாஸ் பண்ணிட்டாங்க. C-Programming பரிட்சைக்கு geometry box எடுத்துட்டு போன ஒரே ஆளு, நம்ம "படிப்பு" பஞ்சாபி தான். class first ம் அவன் தான். இப்ப நான் மட்டும் தான் இந்த பேப்பர் ல அரியர். எனக்கு சொல்லி குடுத்து help பண்ண நம்ம பசங்களால முடியாது. அவங்க பாஸ் ஆனதே பெரிய விஷயம். என்ன பண்றதுனு தெரியாம இப்படியே கொஞ்ச நாள் போய்டுச்சு.

ஒரு நாள் பைக் ரிப்பேர் பண்ண குடுத்துட்டு பஸ்ல காலேஜ்க்கு போனேன். குமார் அந்த பஸ்ல தான் வருவான். நம்ம பசங்க தான் எப்பவும் பொண்ணுக பின்னாடி தான் பஸ்ல நிப்பாங்க. நான் மட்டும் என்ன விதிவிலக்கா(இளிச்சவாயனா)?? நானும் போய் குமார் பக்கத்துல நிக்க, "ஏன்டா மச்சான். ரொம்ப dull ஆ இருக்க" னு அவன் கேக்க, இப்பவாச்சும் ஒருத்தன் கேட்டானேனு சந்தோசப்பட்டு எல்லாத்தையும் கொட்டி தீத்தேன். "நேத்து வேற semester exam timetable வந்திருச்சுல்ல. அரியர் பேப்பர இந்த செம்ல clear பண்ணனும்டா. அத நெனச்சா தான் பயமா இருக்கு"

"எப்ப டா அறியார் exam?" னு குமார் என்ன பாத்து கேட்டான்.
"நம்ம கடைசி exam இருக்குல்ல, அதுக்கு அடுத்த நாள். நம்ம கேசு தான் timetable அ பாத்துட்டு sms அனுப்புனான். மத்த exam னா நம்ம பசங்க கிட்ட கேட்டா போதும். இது programming பேப்பர்ல. நம்ம தான் exam முடிஞ்சதுமே books, notes, record note, எல்லாத்தையும் எடைக்கு போட்டு படத்துக்கு போய்ட்டோமே. படிக்க notes இல்ல. notes குடுடானு "படிப்பு" பஞ்சாபி கிட்ட கேட்டா, அவன் என்னமோ பெரிய ---------- மாதிரி சீன் போடுறான். நீ வேணும்னா பாரு. ஒருநாள் அந்த பஞ்சாபிக்கு என் கையால தான்டா பால்..."

"அவன் எல்லாம் ஒரு ஆளுனு அவன் கிட்ட போய் கேட்டிருக்க. சரி விடு.. இப்ப என்ன தான் பண்ண போற?? னு குமார் கேக்க "அது தான் டா தெரியல.. பசங்க சொன்னாங்க 4 program கண்டிப்பா கேப்பாங்க. program அ மனப்பாடம் பண்ணிக்கனு"

"நான் கூட 2 program எழுதி தான் பாஸ் ஆனேன்." னு குமார் சொல்ல, "CSE பசங்களுக்கும் நமக்கும் ஆகாது. அவனுங்க record notes அ வாங்குனா, ஏதோ கொஞ்சம் சமாளிக்கலாம். ஆனா அவனுங்க கிட்ட போய் கேட்டா, நம்ம கெத்து என்ன ஆகறது." னு சொல்லிட்டு இருந்தப்ப, எங்களுக்கு முன்னாடி நின்னுகிட்டி இருந்த பொண்ணு ஒன்னு என்ன திரும்பி பாத்து சிரிச்சுது.

"இவ ஏன் நம்மள பாத்து பல்லக் காட்டுறா??" என் பொழப்பு எல்லாத்துக்கும் முன்னாடி சிரிப்பா சிரிக்குதுன்னு மட்டு நல்லா புரிஞ்சுது. இத்தோட நிறுத்திக்கணும். இனி பேசுனா நமக்கு இன்னும் கேவலம் தான்னு அமைதியா வேடிக்க பாத்துட்டு வந்தேன். அந்த blue color chudidhar போட்ட பொண்ணு என்ன திரும்பி பாத்து "நான் வேணும்னா என் notes அ தரட்டுமா" னு கேட்டுச்சு.

இந்த ஒன்னே முக்கால் வருசத்துல இப்ப தான் முதல் தடவ ஒரு பொண்ணு என்ன பாத்து அதுவா பேசுது. மனசுக்குள்ள 1000 பட்டாம்பூச்சி பறந்துச்சு. குயில் கூவுது. மயில் ஆடுது.... கிட்ட தட்ட ஒரு jungle குள்ள போன மாதிரி பீலிங். என்ன தான் உள்ளுக்குள்ள சந்தோசமா இருந்தாலும், வெளிய நம்ம கெத்த விட்டுகுடுப்போமா?? "அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல.." னு அவள பாத்து உதடு தான் சொல்லுது, எங்க குடுக்காம போய்டுவாளோனு மனசு கடந்து அடிச்சிக்குது.

"வேண்டாட்டி போ.. எனக்கென்ன.. நீ தான் மறுபடியும் பெயில் ஆக போற" னு சொல்லிட்டு திரும்பி நின்னுட்டா அந்த பொண்ணு. இதுக்கு பேர் தான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறதுனு சொல்லுவாங்க. இவளையும் விட்டுட்டா, நமக்கு வேற வழி இல்லனு நல்லா தெரிஞ்சுபோச்சு. சரி.. எதாவது சொல்லி சமாளிப்போம்னு "ஏய். ஏதோ நீயா வந்து தறேன்குற. உன் மனசு சங்கடப்பட கூடாதுனு வாங்கிக்குறேன்" னு சொல்லி அசடு வழிய வேண்டியதா போச்சு.

"அப்படி வா வழிக்கு. நாளைக்கு எடுத்துட்டு வறேன். வந்து வாங்கிக்க" னு அவ சொன்னதும் காலேஜ் ஸ்டாப் வந்திருச்சு. நம்ம தான் தம் அடிக்காம class க்கு போகக்கூடாதுன்னு எழுதாத சட்டம் இருக்கே. அத எப்படி அவமதிக்கறது?? அதனால, நான் அப்படியே டீக்கடை பக்கம் ஒதுங்க, அவ காலேஜ்க்கு போய்ட்டா. "தம்"ம பத்த வெச்சு பசங்க கிட்ட பேச ஆரம்பிச்சப்ப தான் தோனுச்சு. அவ "பெயர்"ர கூட கேக்கலயே. நாளைக்கு அவ நோட்ட பாத்துக்கலாம். நாளைக்கும் பஸ்ல தான் போகணும் நோட் வாங்கனு முடிவு பண்ணிட்டு class க்கு போனேன்.

சொன்ன மாதிரி notes எல்லாம் எடுத்துட்டு வந்து குடுத்தா. "Thanks" னு சொல்லி வாங்கி open பண்ணி first அவ பெயர் அ தான் பாத்தேன். "சங்கீதா" னு எழுதி பூ எல்லாம் வரஞ்சு இருக்கு. decoration
ல இவளுகள அடிச்சுக்கவே முடியாது. இப்படி தான் ஏதேதோ வரஞ்சு பாஸ் பண்றாளுக. நம்ம தான் இந்த சூது வாது தெரியாமலே வளந்துட்டோம்.

ஒரு பொட்டபுள்ள கிட்ட நோட்ஸ் வாங்கி மறுபடியும் பெயில் ஆனா, அது இன்னும் ரொம்ப கேவலமா போய்டும். அதனால எப்படியாச்சும் பாஸ் ஆகணும்னு நெனச்சு படிக்க ஆரம்பிச்சேன். வழக்கம் போல தான். ஒன்னும் புரியல. எவன் டா கண்டுபுடிச்சான் இந்த prime number program அ, பத்து லைன் தான் இருக்கு, இது நம்மள படுத்துற பாடு. முடியல டா சாமி. இதுவே என் மண்டைல ஏறலையே.. நான் எப்படி stack, queue program எல்லாம் படிக்கப் போறேன்னு எனக்கே தெரியல. என்னமோ போனு note அ தூக்கி அடிச்சிருக்கேன் சில சமயம். புரிஞ்சு படிச்சா இனி சரி வராதுன்னு முடிவு பண்ணி மனப்பாடம் பண்ண ஆரம்பிச்சேன். இந்த டைம் ல பாஸ் பண்ணுனாலே போதும்னு கருப்பசாமிக்கு செஞ்ச சாத்தியத்த ஆல்ட்டர் பண்ணிட்டேன்.

எல்லா பரிட்சையும் எப்படியோ எழுதிட்டேன். இந்த அரியர் தான் மிச்சம். கடைசி பரிட்சை முடிச்சிட்டு பசங்க எல்லாம் படத்துக்கு போனாங்க. நானோ, அதே prime number program அ 536 ஆவது தடவ மனப்பாடம் பண்ணிட்டு இருந்தேன். சந்திரமுகி படத்துல "என்ன கொடுமை சரவணன் இது" னு பிரபு சொன்ன dialogue, எனக்கு சொன்ன மாதிரியே இருந்துச்சு. இன்னைக்கு day night match தான்னு முடிவு பண்ணி அம்மா கிட்ட flask ல coffee எல்லாம் போட்டு வெக்க சொல்லி, கஷ்டப்பட்டு, தட்டு தடுமாறி, ஒருவழியா படிச்சு முடிச்சேன்.

Exam 2 மணிக்கு தான. சீக்கிரம் போய் ஒரு revision பாத்தரலாம் னு நெனச்சு பைக்க எடுத்தா, tyre puncture. ஆரம்பமே அற்புதம்டானு கருப்பசாமி மேல பாரத்த போட்டு, ஓடி போய் பஸ் ஏறி காலேஜ்க்கு போனேன். காலேஜ்க்கு உள்ள போகும்போது , முன்னாடி சங்கீதா வந்தா.. பைக் puncture ஆனா கேட்ட சகுனம், சங்கீதா வ பாத்த நல்லா சகுனம் cancel பன்னிருச்சுன்னு சந்தோசப் பட்டுக்கிட்டேன்.

சங்கீதா என்ன பாத்து "நல்லா படிச்சியா??" னு கேக்க, நானும் ம்...னு தலையை ஆட்டிட்டு மனசுக்குள்ள stack program அ சொல்லி பாத்துட்டு இருந்தேன். "All the best..!!" னு சொல்லிட்டு சிரிச்சிட்டு போனா. அவ போறத பாத்துட்டே இருந்தேன். 1:45 அலெர்ட் பெல் அடிச்சாங்க. வேக வேகமா போய் நோட்டீஸ் போர்டுல exam hall அ தேடுனேன். நம்ம கெட்ட நேரம் சும்மா விடுமா??? Exam hall பக்கத்து building ல போட்டுட்டாங்க. வேக வேகமா அங்கயும் ஓடி, "class ரூம்"ம தேடி கண்டுபுடிச்சு உள்ள போய் என் டெஸ்க்க தேடிப்பாத்தா, first row ல first table. இது வேறயா..?? என்னமோ போனு விட்டுட்டேன். மனசுக்குள்ள program revision மட்டும் ஓடிட்டே இருக்கு.

இன்னிக்குனு பாத்து "ஸ்ட்ரிக்ட்" சிதம்பரம் சார் சூப்பர்வைசிங். யாரா இருந்தா நமக்கென்ன. பிட் அடிச்சாதான பிரச்சனை, நான் தான் நல்லா மனப்பாடம் பண்ணிட்டனே, அப்பறம் என்னனு கொஞ்சம் கெத்தா தான் உக்காந்திருந்தேன். மொத்தமாவே 7 பேருதான் exam hall ல இருக்காங்க. மத்த இடம் எல்லாம் காளியா தான் இருக்கு. அரியர் exam னாலே இப்படி தான் இருக்கும். பேப்பர எடுத்து Registration Number, Subject Name னு எல்லாத்தையும் பில் பண்ணிட்டு, question பேப்பர்க்காக காத்திட்டு இருந்தேன்.

"ஸ்ட்ரிக்ட்" சிதம்பரம் சார் கடைசில இருந்து question பேப்பர் குடுத்துட்டு வந்தார். எனக்கு கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு. prime number program வந்தா பரவால. queue program மட்டும் வரக்கூடாதுன்னு கருப்பசாமிய வேண்டிக்கிட்டு இருந்தேன். பச்சை color question பேப்பர என் கைல குடுத்துட்டு சார் திரும்பறதுக் குள்ள, வேகமா questions அ படிச்சுப் பாத்தா, ஒரு program question கூட இல்ல.

நாசமா போச்சு. வெச்சுட்டாங்கய்யா ஆப்பு. சரி.. ஆனது ஆச்சு. theory questions எதாச்சும் easy யா இருந்தா எழுதுவோம்னு தேடுனா "Difference between Oracle and MS SQL" னு question எல்லாம் இருக்கு. ஒரு நிமிஷம் குழம்பி போய் என்னடானு பாத்தா அது DMBS question பேப்பர்.

அப்பாடா.... இப்ப தான் உயிரே வந்துச்சு. எந்திருச்சு, "சார், இது DBMS question பேப்பர். எனக்கு C-Programming. அந்த question பேப்பர குடுங்க" னு சொல்ல, இதுக்குள்ளயே 15 நிமிஷம் ஓடிப்போய்டுச்சு. அவரு question pouch அ திறந்து தேடித் பாத்துட்டு, "அந்த question paper இங்க இல்லையே. நீ சரியான exam hall க்கு தான் வந்தியா" னு கேட்டு, இன்னோரு இடிய என் தலையில போட்டார்.

டெஸ்க்ல இருந்தது என் நம்பர் தான்னு conform பண்ணிட்டு, "சார், இங்க பாருங்க. என் நம்பர் தான் இருக்கு" னு சொல்ல, அவரும் பாத்துட்டு "சரியாதான் இருக்கு" னு சொல்லி, போர்டு அ பாத்துட்டு, என்ன திரும்பி பாத்து "ஏன்டா.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?? C-Programming exam காலைலடா. இப்ப போய் வந்திருக்க. timetable ல டைம் அ கூட ஒழுங்கா பாக்கமாட்டியா??" னு திட்ட, "fan"னுக்கு கீழ நின்னுட்டு இருந்த எனக்கு குப்புன்னு வேர்த்திருச்சு. தலைல கைய வெச்சு அப்படியே chair ல உக்காந்தேன்.

"இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது. போ. போயிட்டு அடுத்த செம்லயாவது ஒழுங்கா exam time அ பாத்துட்டு வா." னு சார் சொல்ல, வேர்வைய்ய தொடச்சுகிட்டு எந்திருச்சு நின்னு சார் அ பாத்து கேட்டேன் "போ.. போ.. னா எங்க சார் போறது??? லட்சுமி தியேட்டர் ல கூட இப்ப படம் போட்டிருப்பாங்க...".

DEDICATED TO ALL MECHANICAL ENGINEERING STUDENTS.



என்றும் அன்புடன்,
இராஜராஜன்

No comments:

Post a Comment