Saturday, December 19, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-5

"என் பெயர் சந்தியா. என் சொந்த ஊர் திருச்சி, அனால் சென்னையில் குடியேறிவிட்டோம். அப்பா ஒரு மிக பெரிய லட்சியவாதி. AeroPro company இன் நிறுவனர். இந்தியாவின் civil and defense aviation sector க்கு தேவையான உபகரணங்களையும், மென்பொருள்களையும் எங்கள் நிறுவனம் தயாரித்து தருகிறது. Aircraft controller board designing and programming, Aircraft circuit designing, Aircraft Traffic control board development இல் பல நிறுவனங்கள் ஈடுபட்டு இருந்தாலும், இந்தியாவில் முதல் ஐந்து சிறந்த நிறுவனங்கள் மட்டுமே defense aviation sector உடன் ஒப்பந்தம் செய்து வேலை செய்கிறது. இதில் AeroPro வும் ஒன்று என்பதில் பெருமிதம் இருந்தாலும், தன் நிறுவனம் ஏரோ துறையில் இந்தியாவிலேயே முதலிடம் பிடிக்கவேண்டும் என்பது தான் என் அப்பாவின் கனவு. அவருக்கு தொழிலில் துணையாகவும், உதவியாகவும் இருப்பதற்காக என்னை இந்த கல்லூரியில் Aeronautical Engineering படிப்பில் சேரவைத்தார். Aeronautical Engineering முடித்தவுடன் MBA படித்துவிட்டு நிர்வாகத்தில் சேருவேன்." என்று சந்தியா தன் அறிமுகத்தை முடித்தாள். அவளை அனைவரும் கை தட்டி பாராட்டினர். அமைதியாக தன் இடத்திற்கு வந்து அமர்ந்தாள். அவள் முகத்தில் பெருமையும், தன்னம்பிக்கையும் தெரிந்தது.

பலரும் தங்கள் அறிமுகத்தை முடித்த பின், என்னை அறிமுக படுத்திக்கொள்ள சென்றேன். என் அறிமுகம் பலருக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். அதுமட்டுமின்றி சந்தியாவிடம் ஒரு நல்ல அவிப்ரயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வும் இருந்தது.

"என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. நேற்று வரை ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவை நான் பார்த்ததில்லை, ஆனால் நாளை
என் ஒவ்வொரு வேலை உணவும் NASA வில் தான் என்பதே என் லட்சியம்."
என்றதும் மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று என்னை பாராட்டினார்கள். ஆனால் என் பார்வையை சந்தியாவின் பக்கம் திருப்பியது என் மனம். சந்தியா என்னை பார்த்து மெதுவாக "All the best" என்றாள் தன் வலது கை கட்டைவிரலை உயர்த்தியபடி.

கல்லூரி நாட்கள் இனிமையாக செல்ல துவங்கியது. எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவாக துவங்கிய காலம் அது. என் இலட்சியத்தை நன்கு அறிந்த சந்தியா என் கனவை நிறைவேற்றும் பொறுப்பிலும் பங்கெடுக்க துவங்கினாள். ஒரு இலட்சியவாதியின் மகள் அல்லவா?? எங்கள் கல்லூரியின் ஆராய்ச்சிக் கூடத்தில் நடந்துகொண்டிருந்த பல ஆராய்ச்சிகளில் நான் பங்கெடுக்க ஆரம்பித்தேன். சரியான முறையில் என்னை வழிநடத்த இங்கும் எனக்கு ஒரு ஆசிரியர் கிடைத்தார். அவர் தான் பேராசிரியர் ஜான் அந்தோனி சார். எனது ஆற்றலையும், திறமையையும் அறிந்த அவர், தான் செய்துகொண்டிருந்த பல ஆராய்ச்சிகளில் என்னையும் ஈடுபடுத்தினார். நானும் அவரின் ஆராய்ச்சிகளுக்கு பேருதவியை இருந்தேன். எங்களது இணைப்பு இருவரது திறமையையும் மெருகேற்றிக்கொள்ள உதவியது.

கிருஷ்ணாவின் கடந்த கால நினைவுகளை கலைத்தது அவன் மேல் வந்து விழுந்த ஒரு volleyball. கடற்கரைகாற்று சற்று பலமாகவே வீசிற்று. விளையாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் கிருஷ்ணாவை நோக்கி ஓடிவந்தான். வந்தவன் கிருஷ்ணாவின் அருகில் வந்து "Sorry ண்ணா.. miss ஆய்டுச்சு" என்றான் வேகமாக மூச்சு விட்டபடி. "No Problem.. Carry on..!!" என்ற கிருஷ்ணா, volleyball ஐ கொடுத்தபடி பின்னோக்கி பார்த்தான் சந்தியாவை எதிர்பார்த்து. நேரம் கடந்துகொண்டே இருக்கிறது அனால் சந்தியா வருவதன் அறிகுறி கூட தெரியவில்லை. சந்தியா உறுதியாக வருவாள் என்பது கிருஷ்ணா நன்கு அறிந்தது தான் ஏனெனில் அத்தகைய முக்கியமான நாள் இன்று. அனால் தாமதம் ஏன் என்பது மட்டும் கிருஷ்ணாவிற்கு குழப்பமாகவே இருந்தது. சந்தியாவின் உண்மை நிலையை என்னவென்று அறியாத கிருஷ்ணா, சென்னை போக்குவரத்து நெரிசல் தான் தாமதத்திற்கு காரணமாக இருக்கும் என தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டு மீண்டும் இனிமையான கல்லுரி நாட்களை நினைக்க ஆரம்பித்தான் volleyball விளையாடுபவர்களை பார்த்தபடி.

என் கவனம் முழுவதும் படிப்பிலும், ஆராய்ச்சிகளிலும் இருந்தபோதும் என் மாலை நேரத்தை சந்தியவிர்க்காக ஒதுக்கி வைதிருந்தேன். என் மாலை நேர பொழுதுபோக்கு Basket Ball தான். சந்தியா Basket Ball court அருகில் அமர்ந்து என் ஆராய்ச்சி புத்தகங்களை புரட்டிக்கொண்டு என் விளையாட்டை பார்த்துக் கொண்டிருப்பாள். அருண் Basket Ball விளையாட்டில் பெரும் திறமைசாலி. அவன் சிறுவயதிலிருந்தே district level player. அவனுடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனெனில் ஒரு துறையில், திறமை உடையவர்களுடன் பழகும்போது மட்டும் தான் அந்த துறையை முறையாகவும்,முழுவதுமாகவும் கற்றுக்கொள்ள முடியும். நாங்கள் விளையாடும்போது, அருண் மிகத் திறமையாக விளையாடினாலும் என் shoot ஐ மட்டும் பாராட்டும் சந்தியாவை அருண் பார்க்கும் பார்வை, கால் சிலம்புடன் கண்ணகி பாண்டிய மன்னனை பார்த்த பார்வைக்கு ஒப்பிடலாம்.

தொடரும் கல்லுரி நாட்கள்..........


என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Saturday, December 5, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-4

சந்தியா!
என் தன்னம்பிக்கையின் பிறப்பிடம் சந்தியா.
நான் தவம் செய்யாமல் கிடைத்த வரம் சந்தியா.
என் கனவை தன் கனவாய் நினைத்தவள் சந்தியா.
என்னை வானம் அளவுக்கு உயர்த்த துடித்தவள் சந்தியா.
என் வாழ்வில் நட்ப்பாய் நுழைந்து உயிர்றாய் ஆனவள் சந்தியா.

நான் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வினையும், பொறியியல் கல்லூரிக்கான நுழைவு தேர்வினையும் சிறப்பாக எழுதி முடித்தேன். தமிழகத்தின் தலைசிறந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் (Aeronautical Engineering) கல்லுரியான ஸ்ரீ சுப்பிரமணியம் கல்லுரியில் (Sri Subramaniyam College of Aeronautics and Applied Sciences) சேர திட்டமிட்டிருந்தேன். அனுபவமிக்க விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும், எண்ணற்ற புத்தகங்களை கொண்ட நுலகமும் அந்த கல்லுரியின் சிறப்பு. அது மட்டுமின்றி என்னை ஈர்த்த மற்றொரு சிறப்பம்சம் அக்கல்லுரி ராக்கெட் தொழிற்நுட்பத்தில் பல ஆராய்ச்சிகளை செய்துகொண்டிருந்தது. என் விருப்பம்போல் அதேகல்லுரியில் எனக்கு இடம் கிடைத்தது. மாணிக்கவாசகம் அய்யா தன் நண்பரது டிரஸ்ட் (trust) மூலம் எனக்கு ஸ்காலர்ஷிப் (scholarship) பெற்று தந்தார். பல பல எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிக்குள் நுழைந்தேன். நான் எதிர்பாராத ஒன்று சந்தியாவின் சந்திப்பு. எங்கள் முதல் சந்திப்பே என்னை தர்மசங்கடத்தில் நிறுத்தியது, ஆனால் அதன்பிறகு எங்களது ஒவ்வொரு சந்திப்பும் இனிமையானதாகவே அமைந்தது.

என் கல்லூரி கோவை மாநகரில் அமைந்திருந்ததால் நான் கல்லுரி விடுதியில் சேர்ந்து படிக்கவேண்டி இருந்தது. என் அறையில் என்னுடன் அருண் (என் சகமாணவன்) தங்கி இருந்தான். அருணின் அப்பா ஒரு விமானி (Pilot) என்பதால் அருணின் ஆர்வம் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் மீது இருந்தது. சென்னையில் இருந்து வந்த அருணும் என்னை போல் ஒரு லட்சியவாதி தான். நாங்கள் முதல் நாளிலேயே நண்பர்கள் ஆகிவிட்டோம். நாங்கள் இருவரும் வகுப்பறையில் ஒன்றாகவே அமர்ந்திருப்போம்.

கல்லூரியில் சேர்ந்து மூன்றாவது நாள், மதிய உணவுக்குப்பின் வகுப்பறையில் நான் தனியாக அமர்ந்திருந்தேன். அருணுக்காக காத்திருந்தேன். என் சிந்தனை என் சிறுவயது நாட்களை நினவுபடுதிக்கொண்டு இருந்தது. கையில் புத்தகத்துடன், வெண்பட்டு புடவை அணிந்து, வேகமாக வகுப்பறையில் நுழைந்த சந்தியாவை பார்த்ததும் ஆசிரியை என்று நினைத்து சட்டென எழுந்து "Good Afternoon" மேடம் என்றேன். என்னைக்கண்டதும் சந்தியாவிற்கு கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு. மூச்சை உள்ளே இழுக்க கூட மறந்து சிரித்துக்கொண்டிருந்தாள். தர்மசங்கடத்தில் நின்று கொண்டிருந்த என் நிலையை உடனே புரிந்துகொண்ட சந்தியா
"I'm really sorry. நான் எதிர்பாக்காம நீங்க அப்படி சொன்னதும் ம்ம்ம்ம்ம்.......
sorry. sorry. Please don't take it to your heart. By the by I'm Sandhiya" என்றாள் தன் கையை நீட்டியபடி. அவளது இனிமையான குரலையும், கனிவான பேச்சையும் கண்டு வியந்தவண்ணம் "I'm Krishna" என்று கூறி என் கையை மெல்ல உயர்த்தி கை குலுக்கினேன். நண்பர்களுக்கு என்றும் ஒரு சிறப்பு உண்டு. நாகரிகமாக சொல்ல வேண்டுமென்றால் "சரியான நேரத்தில் நம்மை வந்தடைவார்கள்." அருண் மட்டும் விதிவிலக்கா?? எங்கள் கைகள் பிரிவதற்குள் வகுப்பினுள் நுழைந்தான். அருண் எங்களை பார்த்ததும் சந்தியா "catch you later, bye" என்று கூறி அவள் இருக்கைக்கு சென்றாள். அருண் கண்ணில் நெருப்புடன் என்னை பார்த்த பார்வை இதற்குமுன் நான் திரைபடத்தில் மட்டுமே பார்த்தது. என் அருகில் வந்து அமர்ந்த அருண் "டேய் மச்சான்!! காலேஜ் ல சேர்ந்து 2 நாள் தாண்டா ஆச்சு. அதுக்குள்ளயேவா?? எப்படி டா??" என்றான். அவனது ஆச்சர்யத்தை மேலும் வலுபடுத்தவும், என் தர்மசங்கடத்தை மறைத்துவிடவும் ஒருகணம் யோசித்து "Just like that டா!!!" என்று அமைதியாக அமர்ந்துகொண்டேன் மனதுக்குள் சிரித்தபடி. மீண்டும் என்னை முறைத்து பார்த்து அருண் "டேய்.. அது கூட பரவால. ஆனா, நான் வந்ததும் அவள எதுக்குடா போக சொன்ன?? துரோகி." என்றான். சந்தியாவிற்கு வந்ததை போல எனக்கும் சிரிப்பு. என் கையை அருண் தோளில் வைத்து "விடு டா! அப்பறம் intro குடுக்கறேன்" என்றேன்.

கல்லூரியில் சேர்ந்து 1 வாரம் தான் முடிந்திருந்தது. சகமாணவர்களுடன் அதிகம் அறிமுகமும் இல்லை, பரிட்சயமும் இல்லை. எனக்கு தெரிந்த இருவர் அருண் மற்றும் சந்தியா. எங்களை அறிமுகபடுத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்ப்பட்டது. எங்களுக்கு "Personality Development" என்ற ஒரு வகுப்பு இருந்தது. எங்களை நாங்களே அறிமுகபடுத்தி எங்களை பற்றி 5 நிமிடம் பேசவேண்டும். என்னை பற்றியும் என்கனவை பற்றியும் அனைவரிடமும் கூறி அவர்களுக்கும் லட்சிய பாதையை காட்டவேண்டும் என்ற உள்ளுணர்வு எனக்கு இருந்தது. அது மட்டுமின்றி சந்தியாவை பற்றி நான் தெரிந்துக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது.

முதலில் சந்தியா தன்னை அறிமுகபடுத்திக்கொள்ள வகுப்பறையின் மத்தியில் சென்று நின்றாள். தன் மூச்சை நன்கு இழுத்து தன் பேச்சை துவங்கினாள்.


தொடரும் அறிமுகம்......


என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Saturday, November 14, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-3

வங்கக்கடலின் அழகை ரசித்தபடியே ஒவ்வொன்றாக சுண்டலை சுவைத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அவனது தேடலுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. மனதுக்குள் கோவம் நுழையும் போதெல்லாம் அவனது மகிழ்ச்சி அதை அறவே தடுத்து நிறுத்தியது. வாங்கிய சுண்டலும் தீர்ந்து போனது. மீண்டும் தன் சர்ட்டிபிகேட்டை (Certificate ஐ) மெல்ல புரட்ட துவங்கினான் கிருஷ்ணா. இளம் விஞ்ஞானி (Young Scientist) பாராட்டு பத்திரத்தை பார்த்த அக்கணமே தன் 15 வயது சம்பவங்கள் அவன் நினைவை வட்டமிட துவங்கியது.

நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது அப்பாவின் சுதாறிப்பும், அம்மாவின் சேமிப்பும் எங்கள் பொருளாதார நிலையை சற்று மேலே உயர்த்தியது. அது என் மேல்நிலை படிப்பிற்க்கு பேருதவியாய் இருந்தது. 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததாலும், அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றிருந்ததாலும், 11 ஆம் வகுப்பில் என்னால் எளிதில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்ய முடிந்தது. என் சிறுவயதிலிருந்தே அய்யா என்னை அறிவியல் கண்காட்சிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். எங்கு கண்காட்சி நடந்தாலும் நாங்கள் அங்கு செல்வோம். ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் அவர் என்னிடம் திறம்பட விளக்குவார். அதுமட்டுமின்றி என் கண்டுபிடிப்புகளையும் கண்காட்சியில் வைத்து அழகுபார்ப்பார்.

நான் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது பெங்களூர் மாநகரில் இந்திய அளவிலான ஒரு மாபெரும் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டு இருந்தது. அக்கண்காட்சியில் என் அறிவியல் கண்டுபிடிப்பான சாட்டிளைட் ஆர்பிட் சிமுலேசனும் (SATELLITE ORBIT SIMULATION with various Velocities) வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்டுபிடிப்பிற்கு எனக்கு இளம் விஞ்ஞானி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 7 நாட்கள் நடந்த அந்த கண்காட்சியை பார்வையிட ISAC (ISRO Satellite Centre) ஐ சார்ந்த பல விஞ்ஞானிகள் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பானோர் தமிழர்கள். என் கண்டுபிடிப்பின் செயல்முறையை பார்த்து அவர்கள் வியந்து போனார்கள்.

"இதே ஆராய்ச்சியை எங்கள் ISAC ல் ஒரு தனி குழு செய்தது. இந்த ஆராய்ச்சி சாட்டிளைட்டை எப்படி விண்ணில் நிறுத்துவது என்று கணிக்க எங்களுக்கு உதவியது. இப்படிப்பட்ட சிறப்பான ஆராய்ச்சியை இந்த சிறுவயதில் செய்திருப்பது மிகவும் பாரட்டக்கூடியது. இவ்வளவு திறமை கொண்ட மாணவர்களை காண்பது அரிது. அவனது திறமையை சரியாக கண்டறிந்து அதை மேம்படுத்தி இருக்கிறிர்கள். இப்படிப்பட்ட இளைஞர்கள் தான் அறிவியல் உலகத்திற்கு தேவை." என்று மாணிக்கவாசகம் அய்யாவை பார்த்து பாராட்டினர் DR.சுவாமிநாதன் என்னும் விஞ்ஞானி. இவர் தமிழகத்தை சேர்ந்தவர். சுவாமி சார் என்னை பார்த்து "உன் கனவு என்ன?" என்று கேட்டார். என் கனவு தான் 5 வயதிலேயே முடிவானதாயிற்றே. சற்றும் சிந்திக்காமல் "உலகின் தலைசிறந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் இன்ஜினியர் ஆகவேண்டும்" என்றேன் நாசாவை (NASA - National Aeronautics and Space Administration, USA) மனதில் வைத்துக்கொண்டு. அக்கணமே என்னை கட்டி தழுவினர். என் கண்கள் குளமானது. ஒரு மாபெரும் விண்வெளி விஞ்ஞானி என்னை கட்டி தழுவி உற்ச்சாகப்படுத்தியது இன்றும் என் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள். சுவாமி சார் "உனக்கு அறிவியல் சார்ந்த எந்த உதவியானாலும் என்னை கேள்." என்றார். "எனக்கு ரொம்ப நாளா ISRO வ பாக்கனும்னு ஆசை சார்" என்றேன். ஞாயிற்றிகிழமை அறிவியல் கண்காட்சி முடிய இருந்தது. ஏக்கம் கலந்த என் ஆசையை பார்வையிலேயே புரிந்துகொண்ட அவர் என்னை சனிக்கிழமை அழைத்து செல்வதாக கூறினார். உணவுடன் வரும் தாய்க்காக, பசியுடன் காத்திருக்கும் காக்கை குஞ்சுகளைப்போல சனிக்கிழமைக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்.

சனிக்கிழமையும் வந்தது. மாணிக்கவாசகம் அய்யா என்னை அழைத்து செல்ல வந்தபோது என் அறை வாசலில் நான் அவருக்காக காத்துக் கொண்டிருந்தேன். அது அவர் எதிர்பார்ததுதான். ISRO வின் வாசலை அடைந்தவுடனே என்மனதின் பூரிப்பு அதிகரித்தது. மெய் சிலிர்த்தது. இலக்கு இல்லாத எந்த ஒரு சாதரண மனிதனால் நான் கொண்ட பரவசத்தை ஒருபோதும் உணர முடியாது. மகிழ்ச்சியின் வெள்ளத்தில் நான் மிதந்து கொண்டிருந்தேன். ISRO வினுள் பாதுகாப்பு கருதி பல இடங்களில் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தபோதும் சில இடங்களை எங்களால் பார்வையிட முடிந்தது. சுவாமி சார் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். அது அப்துல் கலாம் அவர்களது வாழ்க்கைப் பதிவான "அக்கினி சிறகுகள்" புத்தகம். என் வாழ்வின் மிகபெரிய உண்ணதமான பரிசு இது தான் என்று அந்த புத்தகத்தை படித்தபோது தான் உணர்ந்தேன். அந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வாசகம் "கனவு காணுங்கள். எதையுமே சின்னதாக நினைத்துப் பார்க்காதீர்கள். உங்கள் இலக்கை எப்போதும் மிகப்பிரமாண்டமானதாகவே வைத்திருங்கள். அப்போதுதான் அதை அடைய வேண்டும் என்ற வெறி உங்களை வாட்டிஎடுக்கும். அது தான் வெற்றிக்கு வழி" என்பது தான். கலாம் அய்யா கூறியது சத்தியம் தான். நானும் அப்படி ஒரு மாபெரும் கனவுக்கு சொந்தக்காரன் தான்.

"சந்தியா, கீழ விழுந்துராத மா...." என்ற குரல் கேட்டவுடன் நினைவுகளை உடைத்துக்கொண்டு சட்டென்று இன்றைக்கு திரும்பியது கிருஷ்ணாவின் மனம். தன் கைகடிகாரத்தை பார்த்து பெருமூச்சு விட்டான். மெல்ல குரல் கேட்ட திசையை நோக்கி பார்வையை திருப்பினான். ஒரு குழந்தை கையில் நூலை பிடித்துக்கொண்டு பின்னாலேயே நடந்து வந்து கொண்டிருந்தது. அதன் கவனம் முழுக்க மேலே பறந்து கொண்டிருக்கும் தன் பட்டத்தின் மீதே இருந்தது. 5 வயது இருக்கும் அந்த குழந்தை, மிக சாதுர்யமாக பட்டம் விட்டுக்கொண்டிருந்தது. தன் கையில் இருந்த பைல் ஐ (File) தான் கொண்டுவந்த பையில் வைத்துவிட்டு பின்னோக்கி வரும் அந்த குழந்தையை பிடிக்க சென்றான் கிருஷ்ணா. சற்று நிலை தடுமாறி கீழே விழப்போன அக்குழந்தையை ஓடிப்போய் தாங்கி பிடித்தான். தவறி கீழே விழும் நிலையிலும் அந்த பட்டத்தின் நூலை விடாது பிடித்திருந்தது அந்த குழந்தையின் பொன்விரல்கள். மெல்ல அந்த குழந்தையை தூக்கி முத்தமிட்டான்.

தன் இனிமையான குரலில் "தேங்க்ஸ் அங்கிள் (Thanks uncle). என்ன கீழ இறக்கி விடுங்க. நான் இன்னும் உயரமா பட்டத்த பறக்க விடனும்" என்று கூறி மெல்ல கிருஷ்ணாவின் கையில் இருந்து இறங்கியது.
"உன் பேர் என்ன மா??" என்றான் கிருஷ்ணா.
"சந்தியா அங்கிள்.." என்று கூறி, கிருஷ்ணாவை பார்த்து தன் அழகிய புன்னகையை தெளித்துவிட்டு, பட்டத்தை இழுத்துக்கொண்டு ஓடினால் அந்த சின்ன தேவதை சந்தியா. கிருஷ்ணா மீண்டும் மணலில் அமர்ந்தான். அவன் பார்வை முழுதும் சந்தியாவின் மேலேயே இருந்தபோதும் அவனது என்னமோ, அக்குழந்தை எப்படி பின்னோக்கி சென்றதோ அதைபோல பின்னோக்கி சென்றது.

"சந்தியா! என் சந்தியா!"
"என் சந்தியாவும் இந்த குட்டி சந்தியாவை போல தான், என்னை வானம் அளவுக்கு உயர்த்த நினைத்தவள்.

தொடரும் இந்த லட்சிய பயணத்தின் காதல் அத்யாயம்......


என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Sunday, November 8, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-2

"அண்ணே! சுண்டல் வேணுமா???" என்ற குரல் கிருஷ்ணாவை இன்றைக்கு திரும்ப அழைத்தது. ஒரு சிறுவன் கையில் சுண்டல் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தான். பார்ப்பதற்கு மெலிதாக காணப்பட்ட அச்சிறுவனை பார்த்ததும் கிருஷ்ணாவிற்கு தன் சிறுவயது ஞாபகம் வந்தது. தான் பட்ட கஷ்ட்டங்கள் நினைவுக்கு வர துவங்கியபோதே அதை சற்றுநேரம் நிறுத்திவைத்துவிட்டு, "வேண்டாம் தம்பி!" என்று கூறி ஒருகணம் சிந்தித்து "படிக்கறியா தம்பி!" என்றான். உடனே அந்த சிறுவன் "ஆமாம் அண்ணே! 5 வது படிக்கறேன்! 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிஞ்சுரும். உடனே இங்க வந்துருவேன். நைட் (night) 8.30 இல்ல 9 மணிவரைக்கும் இங்கதான் இருப்பேன்" என்ற சிறுவனை பார்த்து கிருஷ்ணா "நானும் உன்னமாரிதான்ப்பா. சின்ன வயசுல ரொம்ப கஷ்ட்டப்பட்டு தான் முன்னுக்குவந்தேன். நல்லா படி! அது தான் முக்கியம்" என்று கூறி அச்சிறுவன் முதுகில் ஒரு தட்டு தட்டி உற்சாகபடுத்தி, தன் சட்டைப்பையில் இருந்து 5 ரூ எடுத்து அந்த சிறுவனிடம் கொடுத்து "ஒரு சுண்டல் பொட்டலம் குடு" என்றான். புன்னகை வந்து அச்சிறுவனின் முகத்தை அலங்கரித்தது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற முத்தான வாக்கியத்தின் அர்த்தம் மீண்டும் ஒருமுறை புலப்பட்டது கிருஷ்ணாவிற்கு. மகிழ்ச்சியுடன் தன் கையில் இருந்த காகிதத்தை சுண்டல் வைக்க ஏதுவாக சுற்றினான் அச்சிறுவன்.

கிருஷ்ணாவிற்கு தன் 5 வயதில் நண்பர்கள் ராக்கெட் செய்ய பேப்பரை சுற்றிய காட்சி தன் கண்முன் வந்தது. "உன் பெயர் என்னப்பா?" என்ற கிருஷ்ணாவின் கேள்விக்கு காகிதத்தை சுற்றியபடியே "ரவி ண்ணா!" என்று கூறியபடி 2 கைக்கரண்டி சுண்டல் வைத்தான். அதை தன் கையில் வாங்கிக்கொண்டு கிருஷ்ணா "வாழ்க்கை எப்படி போகுது ரவி???" என்றான். "வருமானம் சரியில்ல! ரொம்ப கஷ்ட்டமா தான் இருக்கு." என்று கூறிய ரவியின் முகம் வாடிய மலர் போல மாறத்துவங்கியது. அதை சட்டென்று உணர்ந்த கிருஷ்ணா "ரவி! நாளைக்கு ஜெய்க்கணும்னா இன்னைக்கு கஷ்ட்டபட்டுதான் ஆகணும். இத எப்பவும் மனசுல வச்சுக்கோ. உனக்கு கஷ்ட்டம் தெரியது" என்று நம்பிக்கை கூறினான். "சரி ண்ணா! வரேன்." என்று திரும்ப நடக்க தொடங்கினான் ரவி. அவன் நடையில் ஒரு தன்னம்பிக்கை தெரிந்தது. அந்த தன்னம்பிக்கையை விதைத்தது கிருஷ்ணா. தான் தடுத்து வைத்திருந்த 10 வயது நினைவுகளுக்கு கிருஷ்ணா மீண்டும் உயர் கொடுத்தான்.

என் 10 வயதில், நானும் ரவியை போல தான், வீட்டின் வருமானம் மிகவும் குறைவு என்பதால் பள்ளி விட்டு வந்து ஒரு ஹோட்டல் கடைக்கு வேலைக்கு செல்வேன். பாத்திரம் கழுவிக்கொடுப்பது தான் என் வேலை. நான் அந்த வேலையில் சேர்ந்தது வருமானத்துக்காக மட்டும் அல்ல, இரவு உணவுக்காகவும் தான். கடை அடைக்கும்போது முதலாளி மீதம் உள்ள உணவை எடுத்துக்குகொள்ள சொல்வார். பட்டினியாய் கிடப்பதை விட வேலைசெய்து சாப்பிடுவதில் மகிழ்ச்சி தான் எனக்கும். இப்படி தான் காலம் போனது. சாதாரண நாட்களை ஓட்டுவதே பெரும்பாடாக இருந்த எங்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் என்பது ஒரு கனவாகவே இருந்தது. தீபாவளி பண்டிகை காலம் வந்தது. மாணிக்கவாசகம் அய்யா என்னை தன்மகனாகவே நினைத்தார். அதனால் பண்டிகைக்கு புது ஆடை எடுத்து தருவார். அந்த துணியை அணிவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் வீடு கூரை வீடுதான். எங்கள் ஒரே சொத்தும் அது தான். தீபாவளியின் பொது பட்டாசு வெடித்து தீ பிடிக்காமல் இருக்க கூரையின் மீது நாங்கள் நீரை ஊற்றிவிடுவோம். பக்கத்துக்கு வீட்டு சிறுவர்கள் ராக்கெட் விட்டு தீபாவளியை கொண்டாடுவார்கள். அதை பார்த்துக்கொண்டே இருப்பேன். பக்கத்துவீட்டு சிறுவர்கள் "ஏன் நீங்க ராக்கெட் வெடிக்கல?" என்று கேட்ப்பார்கள். ஒரு நொடி கூட தாமதிக்காமல் நான் கூறுவேன் "நான் ராக்கெட் வெடிக்கமாட்டேன்; இன்னும் கொஞ்சநாள்ல ராக்கெட் விடப்போறேன்" என்று. அச்சிறுவர்கள் அர்த்தம் புரியாமல் விளிப்பார்கள். உறுதியான எதிர்கால லட்சியத்தை நான் கொண்டிருந்ததால் என் ஏழ்மை என்னை பெரிது பாதிக்கவில்லை.

நான் 5 ஆம் வகுப்பு படிக்கும்போது, மாணிக்கவாசகம் அய்யா என்னை 7 ஆம் வகுப்பு மாணவர்களுடன் தான் அமரச்சொல்லுவார். அவர்களுக்கு பாடம் நடத்தும் பொது நானும் அங்கு இருப்பேன், அவர்களுக்கு தேர்வு நடக்கும் பொது நானும் தேர்வு எழுதுவேன். என் அறிவுத்திறனையும், ஆற்றலையும் பன்மடங்கு கூட்டினார் அய்யா. அவர் ஒரு அறிவியல் மேதை. அவருக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வமும் உண்டு, கற்றுகொடுக்கும் ஆர்வமும் உண்டு. அறிவியல் மட்டுமல்லாது எல்லா துறைகளிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஒரு சிற்பி எப்படி ஒரு சிலையை வடிப்பானோ அதைப்போல என்னை பக்குவப்படுத்தினார்.
என் ஆர்வம் எப்போது அறிவியளின்மேலே தான் இருந்தது. வகுப்புகள் இல்லாத நேரம் என்னை நூலகத்தில் தான் காண முடியும். எங்கள் பள்ளி நூலகம் மிகவும் சிறியது. நூலகத்தில் என் கை படாத புத்தகங்களே இல்லை. அவைகள் என் தேடலுக்கு பேருதவியாய் இருந்தது. மாணிக்கவாசகம் அய்யா அவ்வப்போது சென்னைக்கு சென்று வருவார். அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த எந்த புது புத்தகமாயினும் அதை உடனே எனக்காக வாங்கிவருவார். அதை நான் உடனே படித்துவிடுவேன். படிப்பது மட்டுமின்றி அறிவியல் ஆராய்ச்சிகளை செய்தும் பார்பேன், அப்போது அய்யா உடனிருந்து உதவுவார். எங்கள் உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டே போனது.

ஒரு நாள் செய்தித்தாளில் "செப்டம்பர் 20,1993" அன்று இந்தியா "ASLV-D3" செயற்க்கைகோளை செலுத்தவிருப்பதாக செய்தி படித்தேன். எங்கள் வீட்டில் தொலைகாட்சி பெட்டி இல்லை. நான் எப்போதும் என் நண்பன் பாலாஜி வீட்டில் தான் தொலைகாட்சி பார்ப்பேன். செப்டம்பர் 20, அன்று மாலை செய்திகள் காண பாலாஜி வீட்டிற்கு சென்றேன். நான் இதற்கு முன் ராக்கெட் செலுத்துவதை பார்த்ததில்லை. மிகுந்த ஆர்வத்துடன் செய்திகளுக்காக காத்திருந்தேன். செய்திகள் துவங்கின. என் ஆர்வம் அதிகமானது, மனசுக்குள் படபடப்பும் அதிகரித்து. என் கண்கள் தொலைகாட்சி பெட்டியை உற்று நோக்கின. "இன்று இந்தியா ஏவிய ASLV-D3 செயைக்கைகொள் எரிந்து கடலில் விழுந்தது. ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக, திசை மாறி தீ பற்றி எரிந்து நடுக்கடலில் விழுந்தது. இது குறித்து, கோளாறின் காரணத்தை கண்டறிய தனி குழுவினை நியமித்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்." என்ற செய்தியை வாசித்தார் செய்தி வாசிப்பாளார். அதிர்ந்து போனேன். அக்காட்சியையும் செய்திகளில் பார்த்தபோது என் கண்கள் கலங்கிபோனது. இனி ஒரு ராக்கெட் கூட தோற்க கூடாது. அதற்க்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கவும், புதிய சாதனைகளை படைக்கவும் நிச்சயம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேரவேண்டும் என்று மீண்டும் ஒருமுறை எனக்குள் உறுதி செய்துகொண்டேன்.

தொடரும் இந்த லட்சிய பயணம்.......

என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Sunday, November 1, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-1

தமிழகத்தின் தலைநகரமான சிங்காரச் சென்னையின் பெருமையாம் மெரினா கடற்கரையின் மணலை மெல்ல கையில் எடுத்து திரும்ப கடற்கரையில் தூவிக்கொண்டிருந்தான் கிருஷ்ணமூர்த்தி கருப்பசாமி. Dark blue pant , light blue shirt, shoe, tie, சீர செய்யப்பட்ட தலைமுடி என ஒரு மென்பொருள் பொறியாளன் போல தோற்றமளிக்கும் கிருஷ்ணாவின் முகத்தில் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் புன்னகை. தன்னம்பிக்கை தெறிக்கும் அவனது கண்கள் யாரையோ தேடியவண்ணம் இருந்தது. எதிர்பார்ப்பும், படபடப்புடன் இனைந்து கொண்ட அவனது பார்வை நிமிடத்துக்கு பலமுறை கை கடிகாரத்தை பார்வையிட்டுக்கொண்டே இருந்தது. நொடிகள் செல்வது யுகம் போல உணர்ந்த கிருஷ்ணா, அருகில் இருந்த பையில் இருந்து ஒரு blue color file ஐ எடுத்து மெல்ல அதை புரட்ட துவங்கினான். அந்த file ல் அவனின் certificates தான் இருக்கும் என்று எவராலும் எளிதில் யூகிக்க முடியும். அவன் கை பக்கங்களை புரட்ட அவன் என்னமோ தான் கடந்துவந்த பாதையை புரட்ட ஆரம்பித்தது.

கரிசல்காட்டு கிராமத்து எளிழிளில் திரிந்த காலம்,
வயல் வரப்புகளில் வியர்வை வழிய உழைத்த காலம்,
மழை ஒழுகும் கூரையை மறைக்க முடியாமல் தவித்த காலம், கனவுகளை சுமந்துகொண்டு; கவலைகளை மறந்து கல்வியை மட்டும் தேடிய காலம்,
கால்நடையாய் பள்ளிக்கு சென்ற காலம்,
தெருவிளக்கின் வெளிச்சத்தில் படித்த காலம்,
தன்னம்பிக்கையுடன் லட்சியத்தை சேர்த்து விடியலுக்காக காத்திருந்த காலம்,
நூலகம் மட்டுமே உலகமென நினைத்திருந்த காலம்,
காகிதத்தில் rocket விட்டு விழையாடும் நண்பர்கள் மத்தியில்; rocket தொழில்நுட்பத்தில் புதுமையை புகுத்தி புரட்சி செய்ய துடித்த காலம்,.......

ஒரு சாதாரண கிராமத்தில் சாதாரண கூலி தொழிலாளியின் மகனாக பிறந்தபோதும், வறுமை பிடியின் மடியில் தவல்ந்தபோதும், ஏழை சமுதாய மக்களின் உழைப்பினால் வழியும் வியர்வைத்துளியின் உன்னதத்தை உணரும்போதும், என் கனவு என் கிராமத்தை பெருமைப்படுத்தும் என்ற நம்பிக்கை மனதில் ஒலிக்கும்போதும், வெற்றிபெற துடிக்கும் இதயம் பலம பெருக செய்தவர் மாணிக்கவாசகம் அய்யா. என் அறிவியல் ஆசரியர். "என்னால் சாதிக்க முடியாத சாதனையை நீ சாதிப்பாய்" என்று எனக்கு ஊக்கம் தந்த அவர்தான் என் உயரிய கனவுக்கு சொந்தக்காரர்.

என் 5 வயதில், காகித rocket எப்படி பறக்கிறது என்று அவரைப்பார்த்து கேட்ட நாள் இன்றும் என் மனதில் அப்படியே பசுமையாக இருக்கிறது. காகித rocket ஐ வியந்து பார்த்த என்னை rocket ஐ வடிவமைக்கும் வல்லுனராக மாற்ற அவர் பட்ட சிரமங்கள்தான் என்னென்ன.
ஏழ்மையின் உச்சத்தில் இருந்த என் குடும்பத்தின் ஒரே நம்பிக்கை நான் தான். எங்கள் வருமானம் இருவேளை உணவுக்கு கூட போதாதநிலை. கந்தல் ஆடை, இலவச பாட புத்தகம், மதிய சத்துணவு, ஏழுதி படிக்க slate, தெருவிளக்கு வெளிச்சம் என இப்படி தான் என் கல்வி ஆரம்பித்தது.

மாணிக்கவாசகம் அய்யா என்னையும் என் பொருளாதர நிலையையும் நன்கே அறிவார். அவர் என்னிடம் அடிக்கடி ஒன்றை கூறுவார். "நாளைக்கு ஜெய்க்கணும்னா இன்னைக்கு கஷ்ட்டபட்டுதான் ஆகணும்" .
இன்னைக்கும் என்னை உற்சாகபடுதுற வார்த்தை அவர் சொன்னது தான்.

பள்ளியில் சேர்ந்த சில நாட்களிலேயே என் அறிவியல் திறனை கண்டு அதை மேன்படுத்த ஆரம்பித்தார். என்னை rocket designer ஆக்க விரும்பினார். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேருவதை மட்டுமே லட்சியமாக வைக்க சொன்னார். என் லட்சியம் 5 வயதில் முடிவானது. இன்று 21 ஆண்டுகள் கழித்து அது நிறைவேற போகிற வேளையில் அய்யா என்னுடன் இல்லையே என்ற வேதனை ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது.

"அண்ணே! சுண்டல் வேணுமா???" என்ற குரல் கிருஷ்ணாவை இன்றைக்கு திரும்ப அழைத்தது.

தொடரும்.......



என்றும் அன்புடன்,
இராஜராஜன்