Sunday, November 8, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-2

"அண்ணே! சுண்டல் வேணுமா???" என்ற குரல் கிருஷ்ணாவை இன்றைக்கு திரும்ப அழைத்தது. ஒரு சிறுவன் கையில் சுண்டல் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தான். பார்ப்பதற்கு மெலிதாக காணப்பட்ட அச்சிறுவனை பார்த்ததும் கிருஷ்ணாவிற்கு தன் சிறுவயது ஞாபகம் வந்தது. தான் பட்ட கஷ்ட்டங்கள் நினைவுக்கு வர துவங்கியபோதே அதை சற்றுநேரம் நிறுத்திவைத்துவிட்டு, "வேண்டாம் தம்பி!" என்று கூறி ஒருகணம் சிந்தித்து "படிக்கறியா தம்பி!" என்றான். உடனே அந்த சிறுவன் "ஆமாம் அண்ணே! 5 வது படிக்கறேன்! 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிஞ்சுரும். உடனே இங்க வந்துருவேன். நைட் (night) 8.30 இல்ல 9 மணிவரைக்கும் இங்கதான் இருப்பேன்" என்ற சிறுவனை பார்த்து கிருஷ்ணா "நானும் உன்னமாரிதான்ப்பா. சின்ன வயசுல ரொம்ப கஷ்ட்டப்பட்டு தான் முன்னுக்குவந்தேன். நல்லா படி! அது தான் முக்கியம்" என்று கூறி அச்சிறுவன் முதுகில் ஒரு தட்டு தட்டி உற்சாகபடுத்தி, தன் சட்டைப்பையில் இருந்து 5 ரூ எடுத்து அந்த சிறுவனிடம் கொடுத்து "ஒரு சுண்டல் பொட்டலம் குடு" என்றான். புன்னகை வந்து அச்சிறுவனின் முகத்தை அலங்கரித்தது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற முத்தான வாக்கியத்தின் அர்த்தம் மீண்டும் ஒருமுறை புலப்பட்டது கிருஷ்ணாவிற்கு. மகிழ்ச்சியுடன் தன் கையில் இருந்த காகிதத்தை சுண்டல் வைக்க ஏதுவாக சுற்றினான் அச்சிறுவன்.

கிருஷ்ணாவிற்கு தன் 5 வயதில் நண்பர்கள் ராக்கெட் செய்ய பேப்பரை சுற்றிய காட்சி தன் கண்முன் வந்தது. "உன் பெயர் என்னப்பா?" என்ற கிருஷ்ணாவின் கேள்விக்கு காகிதத்தை சுற்றியபடியே "ரவி ண்ணா!" என்று கூறியபடி 2 கைக்கரண்டி சுண்டல் வைத்தான். அதை தன் கையில் வாங்கிக்கொண்டு கிருஷ்ணா "வாழ்க்கை எப்படி போகுது ரவி???" என்றான். "வருமானம் சரியில்ல! ரொம்ப கஷ்ட்டமா தான் இருக்கு." என்று கூறிய ரவியின் முகம் வாடிய மலர் போல மாறத்துவங்கியது. அதை சட்டென்று உணர்ந்த கிருஷ்ணா "ரவி! நாளைக்கு ஜெய்க்கணும்னா இன்னைக்கு கஷ்ட்டபட்டுதான் ஆகணும். இத எப்பவும் மனசுல வச்சுக்கோ. உனக்கு கஷ்ட்டம் தெரியது" என்று நம்பிக்கை கூறினான். "சரி ண்ணா! வரேன்." என்று திரும்ப நடக்க தொடங்கினான் ரவி. அவன் நடையில் ஒரு தன்னம்பிக்கை தெரிந்தது. அந்த தன்னம்பிக்கையை விதைத்தது கிருஷ்ணா. தான் தடுத்து வைத்திருந்த 10 வயது நினைவுகளுக்கு கிருஷ்ணா மீண்டும் உயர் கொடுத்தான்.

என் 10 வயதில், நானும் ரவியை போல தான், வீட்டின் வருமானம் மிகவும் குறைவு என்பதால் பள்ளி விட்டு வந்து ஒரு ஹோட்டல் கடைக்கு வேலைக்கு செல்வேன். பாத்திரம் கழுவிக்கொடுப்பது தான் என் வேலை. நான் அந்த வேலையில் சேர்ந்தது வருமானத்துக்காக மட்டும் அல்ல, இரவு உணவுக்காகவும் தான். கடை அடைக்கும்போது முதலாளி மீதம் உள்ள உணவை எடுத்துக்குகொள்ள சொல்வார். பட்டினியாய் கிடப்பதை விட வேலைசெய்து சாப்பிடுவதில் மகிழ்ச்சி தான் எனக்கும். இப்படி தான் காலம் போனது. சாதாரண நாட்களை ஓட்டுவதே பெரும்பாடாக இருந்த எங்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் என்பது ஒரு கனவாகவே இருந்தது. தீபாவளி பண்டிகை காலம் வந்தது. மாணிக்கவாசகம் அய்யா என்னை தன்மகனாகவே நினைத்தார். அதனால் பண்டிகைக்கு புது ஆடை எடுத்து தருவார். அந்த துணியை அணிவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் வீடு கூரை வீடுதான். எங்கள் ஒரே சொத்தும் அது தான். தீபாவளியின் பொது பட்டாசு வெடித்து தீ பிடிக்காமல் இருக்க கூரையின் மீது நாங்கள் நீரை ஊற்றிவிடுவோம். பக்கத்துக்கு வீட்டு சிறுவர்கள் ராக்கெட் விட்டு தீபாவளியை கொண்டாடுவார்கள். அதை பார்த்துக்கொண்டே இருப்பேன். பக்கத்துவீட்டு சிறுவர்கள் "ஏன் நீங்க ராக்கெட் வெடிக்கல?" என்று கேட்ப்பார்கள். ஒரு நொடி கூட தாமதிக்காமல் நான் கூறுவேன் "நான் ராக்கெட் வெடிக்கமாட்டேன்; இன்னும் கொஞ்சநாள்ல ராக்கெட் விடப்போறேன்" என்று. அச்சிறுவர்கள் அர்த்தம் புரியாமல் விளிப்பார்கள். உறுதியான எதிர்கால லட்சியத்தை நான் கொண்டிருந்ததால் என் ஏழ்மை என்னை பெரிது பாதிக்கவில்லை.

நான் 5 ஆம் வகுப்பு படிக்கும்போது, மாணிக்கவாசகம் அய்யா என்னை 7 ஆம் வகுப்பு மாணவர்களுடன் தான் அமரச்சொல்லுவார். அவர்களுக்கு பாடம் நடத்தும் பொது நானும் அங்கு இருப்பேன், அவர்களுக்கு தேர்வு நடக்கும் பொது நானும் தேர்வு எழுதுவேன். என் அறிவுத்திறனையும், ஆற்றலையும் பன்மடங்கு கூட்டினார் அய்யா. அவர் ஒரு அறிவியல் மேதை. அவருக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வமும் உண்டு, கற்றுகொடுக்கும் ஆர்வமும் உண்டு. அறிவியல் மட்டுமல்லாது எல்லா துறைகளிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஒரு சிற்பி எப்படி ஒரு சிலையை வடிப்பானோ அதைப்போல என்னை பக்குவப்படுத்தினார்.
என் ஆர்வம் எப்போது அறிவியளின்மேலே தான் இருந்தது. வகுப்புகள் இல்லாத நேரம் என்னை நூலகத்தில் தான் காண முடியும். எங்கள் பள்ளி நூலகம் மிகவும் சிறியது. நூலகத்தில் என் கை படாத புத்தகங்களே இல்லை. அவைகள் என் தேடலுக்கு பேருதவியாய் இருந்தது. மாணிக்கவாசகம் அய்யா அவ்வப்போது சென்னைக்கு சென்று வருவார். அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த எந்த புது புத்தகமாயினும் அதை உடனே எனக்காக வாங்கிவருவார். அதை நான் உடனே படித்துவிடுவேன். படிப்பது மட்டுமின்றி அறிவியல் ஆராய்ச்சிகளை செய்தும் பார்பேன், அப்போது அய்யா உடனிருந்து உதவுவார். எங்கள் உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டே போனது.

ஒரு நாள் செய்தித்தாளில் "செப்டம்பர் 20,1993" அன்று இந்தியா "ASLV-D3" செயற்க்கைகோளை செலுத்தவிருப்பதாக செய்தி படித்தேன். எங்கள் வீட்டில் தொலைகாட்சி பெட்டி இல்லை. நான் எப்போதும் என் நண்பன் பாலாஜி வீட்டில் தான் தொலைகாட்சி பார்ப்பேன். செப்டம்பர் 20, அன்று மாலை செய்திகள் காண பாலாஜி வீட்டிற்கு சென்றேன். நான் இதற்கு முன் ராக்கெட் செலுத்துவதை பார்த்ததில்லை. மிகுந்த ஆர்வத்துடன் செய்திகளுக்காக காத்திருந்தேன். செய்திகள் துவங்கின. என் ஆர்வம் அதிகமானது, மனசுக்குள் படபடப்பும் அதிகரித்து. என் கண்கள் தொலைகாட்சி பெட்டியை உற்று நோக்கின. "இன்று இந்தியா ஏவிய ASLV-D3 செயைக்கைகொள் எரிந்து கடலில் விழுந்தது. ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக, திசை மாறி தீ பற்றி எரிந்து நடுக்கடலில் விழுந்தது. இது குறித்து, கோளாறின் காரணத்தை கண்டறிய தனி குழுவினை நியமித்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்." என்ற செய்தியை வாசித்தார் செய்தி வாசிப்பாளார். அதிர்ந்து போனேன். அக்காட்சியையும் செய்திகளில் பார்த்தபோது என் கண்கள் கலங்கிபோனது. இனி ஒரு ராக்கெட் கூட தோற்க கூடாது. அதற்க்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கவும், புதிய சாதனைகளை படைக்கவும் நிச்சயம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேரவேண்டும் என்று மீண்டும் ஒருமுறை எனக்குள் உறுதி செய்துகொண்டேன்.

தொடரும் இந்த லட்சிய பயணம்.......

என்றும் அன்புடன்,
இராஜராஜன்

1 comment:

  1. முதல் பாகத்துல இருந்த விறுவிறுப்பு இதுல இல்ல..

    அடுத்த பாகத்தில் பார்க்கலாம்..

    ReplyDelete