Saturday, November 14, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-3

வங்கக்கடலின் அழகை ரசித்தபடியே ஒவ்வொன்றாக சுண்டலை சுவைத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அவனது தேடலுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. மனதுக்குள் கோவம் நுழையும் போதெல்லாம் அவனது மகிழ்ச்சி அதை அறவே தடுத்து நிறுத்தியது. வாங்கிய சுண்டலும் தீர்ந்து போனது. மீண்டும் தன் சர்ட்டிபிகேட்டை (Certificate ஐ) மெல்ல புரட்ட துவங்கினான் கிருஷ்ணா. இளம் விஞ்ஞானி (Young Scientist) பாராட்டு பத்திரத்தை பார்த்த அக்கணமே தன் 15 வயது சம்பவங்கள் அவன் நினைவை வட்டமிட துவங்கியது.

நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது அப்பாவின் சுதாறிப்பும், அம்மாவின் சேமிப்பும் எங்கள் பொருளாதார நிலையை சற்று மேலே உயர்த்தியது. அது என் மேல்நிலை படிப்பிற்க்கு பேருதவியாய் இருந்தது. 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததாலும், அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றிருந்ததாலும், 11 ஆம் வகுப்பில் என்னால் எளிதில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்ய முடிந்தது. என் சிறுவயதிலிருந்தே அய்யா என்னை அறிவியல் கண்காட்சிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். எங்கு கண்காட்சி நடந்தாலும் நாங்கள் அங்கு செல்வோம். ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் அவர் என்னிடம் திறம்பட விளக்குவார். அதுமட்டுமின்றி என் கண்டுபிடிப்புகளையும் கண்காட்சியில் வைத்து அழகுபார்ப்பார்.

நான் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது பெங்களூர் மாநகரில் இந்திய அளவிலான ஒரு மாபெரும் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டு இருந்தது. அக்கண்காட்சியில் என் அறிவியல் கண்டுபிடிப்பான சாட்டிளைட் ஆர்பிட் சிமுலேசனும் (SATELLITE ORBIT SIMULATION with various Velocities) வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்டுபிடிப்பிற்கு எனக்கு இளம் விஞ்ஞானி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 7 நாட்கள் நடந்த அந்த கண்காட்சியை பார்வையிட ISAC (ISRO Satellite Centre) ஐ சார்ந்த பல விஞ்ஞானிகள் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பானோர் தமிழர்கள். என் கண்டுபிடிப்பின் செயல்முறையை பார்த்து அவர்கள் வியந்து போனார்கள்.

"இதே ஆராய்ச்சியை எங்கள் ISAC ல் ஒரு தனி குழு செய்தது. இந்த ஆராய்ச்சி சாட்டிளைட்டை எப்படி விண்ணில் நிறுத்துவது என்று கணிக்க எங்களுக்கு உதவியது. இப்படிப்பட்ட சிறப்பான ஆராய்ச்சியை இந்த சிறுவயதில் செய்திருப்பது மிகவும் பாரட்டக்கூடியது. இவ்வளவு திறமை கொண்ட மாணவர்களை காண்பது அரிது. அவனது திறமையை சரியாக கண்டறிந்து அதை மேம்படுத்தி இருக்கிறிர்கள். இப்படிப்பட்ட இளைஞர்கள் தான் அறிவியல் உலகத்திற்கு தேவை." என்று மாணிக்கவாசகம் அய்யாவை பார்த்து பாராட்டினர் DR.சுவாமிநாதன் என்னும் விஞ்ஞானி. இவர் தமிழகத்தை சேர்ந்தவர். சுவாமி சார் என்னை பார்த்து "உன் கனவு என்ன?" என்று கேட்டார். என் கனவு தான் 5 வயதிலேயே முடிவானதாயிற்றே. சற்றும் சிந்திக்காமல் "உலகின் தலைசிறந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் இன்ஜினியர் ஆகவேண்டும்" என்றேன் நாசாவை (NASA - National Aeronautics and Space Administration, USA) மனதில் வைத்துக்கொண்டு. அக்கணமே என்னை கட்டி தழுவினர். என் கண்கள் குளமானது. ஒரு மாபெரும் விண்வெளி விஞ்ஞானி என்னை கட்டி தழுவி உற்ச்சாகப்படுத்தியது இன்றும் என் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள். சுவாமி சார் "உனக்கு அறிவியல் சார்ந்த எந்த உதவியானாலும் என்னை கேள்." என்றார். "எனக்கு ரொம்ப நாளா ISRO வ பாக்கனும்னு ஆசை சார்" என்றேன். ஞாயிற்றிகிழமை அறிவியல் கண்காட்சி முடிய இருந்தது. ஏக்கம் கலந்த என் ஆசையை பார்வையிலேயே புரிந்துகொண்ட அவர் என்னை சனிக்கிழமை அழைத்து செல்வதாக கூறினார். உணவுடன் வரும் தாய்க்காக, பசியுடன் காத்திருக்கும் காக்கை குஞ்சுகளைப்போல சனிக்கிழமைக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்.

சனிக்கிழமையும் வந்தது. மாணிக்கவாசகம் அய்யா என்னை அழைத்து செல்ல வந்தபோது என் அறை வாசலில் நான் அவருக்காக காத்துக் கொண்டிருந்தேன். அது அவர் எதிர்பார்ததுதான். ISRO வின் வாசலை அடைந்தவுடனே என்மனதின் பூரிப்பு அதிகரித்தது. மெய் சிலிர்த்தது. இலக்கு இல்லாத எந்த ஒரு சாதரண மனிதனால் நான் கொண்ட பரவசத்தை ஒருபோதும் உணர முடியாது. மகிழ்ச்சியின் வெள்ளத்தில் நான் மிதந்து கொண்டிருந்தேன். ISRO வினுள் பாதுகாப்பு கருதி பல இடங்களில் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தபோதும் சில இடங்களை எங்களால் பார்வையிட முடிந்தது. சுவாமி சார் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். அது அப்துல் கலாம் அவர்களது வாழ்க்கைப் பதிவான "அக்கினி சிறகுகள்" புத்தகம். என் வாழ்வின் மிகபெரிய உண்ணதமான பரிசு இது தான் என்று அந்த புத்தகத்தை படித்தபோது தான் உணர்ந்தேன். அந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வாசகம் "கனவு காணுங்கள். எதையுமே சின்னதாக நினைத்துப் பார்க்காதீர்கள். உங்கள் இலக்கை எப்போதும் மிகப்பிரமாண்டமானதாகவே வைத்திருங்கள். அப்போதுதான் அதை அடைய வேண்டும் என்ற வெறி உங்களை வாட்டிஎடுக்கும். அது தான் வெற்றிக்கு வழி" என்பது தான். கலாம் அய்யா கூறியது சத்தியம் தான். நானும் அப்படி ஒரு மாபெரும் கனவுக்கு சொந்தக்காரன் தான்.

"சந்தியா, கீழ விழுந்துராத மா...." என்ற குரல் கேட்டவுடன் நினைவுகளை உடைத்துக்கொண்டு சட்டென்று இன்றைக்கு திரும்பியது கிருஷ்ணாவின் மனம். தன் கைகடிகாரத்தை பார்த்து பெருமூச்சு விட்டான். மெல்ல குரல் கேட்ட திசையை நோக்கி பார்வையை திருப்பினான். ஒரு குழந்தை கையில் நூலை பிடித்துக்கொண்டு பின்னாலேயே நடந்து வந்து கொண்டிருந்தது. அதன் கவனம் முழுக்க மேலே பறந்து கொண்டிருக்கும் தன் பட்டத்தின் மீதே இருந்தது. 5 வயது இருக்கும் அந்த குழந்தை, மிக சாதுர்யமாக பட்டம் விட்டுக்கொண்டிருந்தது. தன் கையில் இருந்த பைல் ஐ (File) தான் கொண்டுவந்த பையில் வைத்துவிட்டு பின்னோக்கி வரும் அந்த குழந்தையை பிடிக்க சென்றான் கிருஷ்ணா. சற்று நிலை தடுமாறி கீழே விழப்போன அக்குழந்தையை ஓடிப்போய் தாங்கி பிடித்தான். தவறி கீழே விழும் நிலையிலும் அந்த பட்டத்தின் நூலை விடாது பிடித்திருந்தது அந்த குழந்தையின் பொன்விரல்கள். மெல்ல அந்த குழந்தையை தூக்கி முத்தமிட்டான்.

தன் இனிமையான குரலில் "தேங்க்ஸ் அங்கிள் (Thanks uncle). என்ன கீழ இறக்கி விடுங்க. நான் இன்னும் உயரமா பட்டத்த பறக்க விடனும்" என்று கூறி மெல்ல கிருஷ்ணாவின் கையில் இருந்து இறங்கியது.
"உன் பேர் என்ன மா??" என்றான் கிருஷ்ணா.
"சந்தியா அங்கிள்.." என்று கூறி, கிருஷ்ணாவை பார்த்து தன் அழகிய புன்னகையை தெளித்துவிட்டு, பட்டத்தை இழுத்துக்கொண்டு ஓடினால் அந்த சின்ன தேவதை சந்தியா. கிருஷ்ணா மீண்டும் மணலில் அமர்ந்தான். அவன் பார்வை முழுதும் சந்தியாவின் மேலேயே இருந்தபோதும் அவனது என்னமோ, அக்குழந்தை எப்படி பின்னோக்கி சென்றதோ அதைபோல பின்னோக்கி சென்றது.

"சந்தியா! என் சந்தியா!"
"என் சந்தியாவும் இந்த குட்டி சந்தியாவை போல தான், என்னை வானம் அளவுக்கு உயர்த்த நினைத்தவள்.

தொடரும் இந்த லட்சிய பயணத்தின் காதல் அத்யாயம்......


என்றும் அன்புடன்,
இராஜராஜன்

1 comment: