Monday, December 27, 2010

ஒரு லட்சியவாதியின் காதல் கதை - அத்யாயம்-11


ஊருக்கு புறப்பட்டேன் அன்றிரவே. மறுநாள் காலை வழியில் பார்த்தவர்கள் எல்லாம் நலம் விசாரிக்க, அவர்களிடம் சிறு நேரம் பேசிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். என்னை கண்டதும் என் அம்மா, களைந்துக் கொண்டிருந்த அரிசி பத்திரத்தை அப்படியே கீழே வைத்து விட்டு, ஓடி வந்து தன் இரு கைகளையும் என் முகத்தில் வைத்து, பின் தன் தலையில் கையை அழுத்தி திருஷ்டி எடுத்தபின் என் கையை பிடித்து "வாய்யா... வா... உக்காரு.. உன்ன பாத்து எம்புட்டு நாள் ஆச்சு. எப்படியா இருக்க?? பரிச்ச எல்லாம் நல்ல எழுதுனியா??" என்று கேட்டுக்கொண்டே என்னை கட்டிலில் அமரச்செய்தார். "நல்லா இருக்கேன் ஆத்தா.. பாத்தா தெரியலையா??? பரிட்சையும் நல்ல எழுதிருக்கேன்."

"ரொம்ப சந்தோசம் யா... சரி.. நீ போய் சட்ட துணி மாத்திக்க.. நான் போய் காப்பி தண்ணி வெக்கறேன்." என்று கூறி அம்மா சமையலறைக்குள் புத்துணர்வுடன் புகுந்து அடுப்பினை பற்ற வைக்க, நான் அங்கு சென்று "அய்யன் எங்க ஆத்தா???" என்று கேட்க, அம்மா பதில் சொல்ல வாய் எடுக்கும் முன்னே, "தம்பி, எப்படா வந்த??" என்றார் என் அப்பா குளித்துவிட்டு வந்து தலையை துவட்டியபடியே.

"இப்ப தான் அய்யா. 9.45 பஸ்ல வந்தேன்." என்றதும் அப்பா அம்மாவை பார்த்து, "ஏய்.!! புள்ளைக்கு டிபன் வெய்.. சாப்படட்டும் மொதல்ல..." என்று சொல்ல "இந்த காப்பி தண்ணிய குடிக்கட்டும். இட்லி வேகுது, 10 நிமிஷத்துல டிபன் வெச்சர்றேன்."

நான் குளித்துவிட்டு வர; இட்லியும், அம்மியில் அரைத்த புதினா சட்டினியும் தயாராக இருந்தது. விடுதி உணவை உண்டு சலித்துப்போன எனக்கு அம்மாவின் கை சமையல் மேலும் பசியை தூண்டியது. நானும் அப்பாவும் சாப்பிட அமர்ந்தோம். "ஏன் தம்பி. பரிட்சை எப்படி எழுதுன?? உடனே வேலை கெடச்சுடுமா???" என்றார் அப்பா சாப்பிட்டுக்கொண்டே.

"exam நல்லா எழுதிருக்கேன். 1 மாசத்துல result வந்திடும். காலேஜ்லயே 1st வருவேன்ய்யா.. புரட்டாசி மாசம் மெட்ராசுல வேலைக்கு ஆள் எடுப்பாங்க. அப்ப வேலை கெடச்சிடும். மார்கழி மாசம் வேலைக்கு சேரனும் அமெரிக்கா ."

"எப்படியோ அய்யன் கஷ்டப்பட்டு உன்ன படிக்க வெச்சுது. நீயும் நல்லா படிச்சு ஒரு நல்லா நெலைக்கு வந்துட்ட. நீ நல்லா இருக்கனும்ய்யா.. அதுதேன் எங்க ஆச." என்று கண்கலங்கிக்கொண்டே கூறும் அம்மாவின் பாசமும், "அட... இவ ஒருத்தி.. புள்ள இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்திருக்கு. அவன் முன்னாடி கண்ண கசக்கிட்டு. நீ சாப்புடு யா.. புள்ள எளச்சுக் கெடக்கான். பையனுக்கு இன்னும் 2 இட்லி வெய்.. " என்று கூறும் அப்பாவின் அக்கறையும், என்னை கண்கலங்கச் செய்தாலும், அவர்களுடன் இருப்பது எனக்கு எப்போதும் நிறைவையும் பெருமையையும் தந்தது. அவர்களை கண்ட ஆனந்தத்தில் அன்றைய பொழுது போனதே தெரியவில்லை.

மறுநாள், அப்பாவுடன் வயலுக்கு சென்றேன். நானும் சற்று உதவலாமே அவருக்கு என்று வயலில் கால் வைக்க, "தம்பி, நீ ஏன்ப்பா வயல்ல எறங்குற? அது என்னோட போகட்டும்னு தான உன்ன படிக்க வெச்சேன். போய் அங்கிட்டு உக்காருய்யா... படிச்ச புள்ள எதுக்கு வயல்லயும், வெயில்லயும் கஷ்டபட்டுகிட்டு.." என்றார். அவருக்கு என்மேல் இருந்த பாசம் தான் எத்தனை எத்தனை...

"அட.. என்ன அய்யா இப்படி சொல்லிட்டிங்க.. இந்த விவசாயம் தான என்ன படிக்க வெச்சிது. இந்த விவசாயம் தான நமக்கு சோறு போடுது.. நமக்கு மட்டும் இல்லாம, பலருக்கு பசிய போக்குது. இதுல என்ன கஷ்டம்??? படிச்சவங்க எல்லாம் வேலைக்கு போய்ட்ட, நாளைக்கு யாருய்யா விவசாயம் பாக்கறது. நான் நாசா போய் வேலை பாத்துட்டு கொஞ்சம் வருஷம் கழிச்சு, இங்க வந்து விவசாயம் தான் பாக்க போறேன்." என்று கூறி மம்பட்டியை எடுத்து நீர் பாய்ச்ச ஆரம்பித்தேன்.

"நீ சொல்றது சரி தான். இப்ப 10 ஆவது படிச்ச பசங்க கூட விவசாயம் பாக்க மாட்டேன்னு சொல்லுதுக. உங்க மாறி ஆளுங்க ஊருக்கு திரும்பி வந்து விவசாயம் பாத்தா தான் நாளைக்கு சாப்பாடு." என்று கூறிக்கொண்டே வயலின் மறுமுனையில் களையெடுக்க ஆரம்பித்தார்.

வயலில் வேலைசெய்த களைப்பு. அன்று இரவு நிம்மதியான உறக்கம். இந்த இரண்டு நாளில் சந்தியாவின் நினைவே இல்லை. மூன்றாம் நாள் அவளது நினைவு மெல்ல என் மனதை எட்டிப்பார்த்தது. சந்தியாவிடம் பேச வேண்டும் என்று மனம் துடித்தது. அவளது வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்து பேசினேன். பேசும் நேரம் கூட தெரியாமல் வெகு நேரம் பேசிவிட்டோம். இது தினமும் தொடர்ந்தது. அவ்வப்போது அருணிடமும் பேச நான் தவறுவது இல்லை. இப்படியாக சில வாரங்கள் ஓடின.

செப்டம்பர் மாதம் வந்தது. நாசா நேர்முகத்தேர்வுக்கு தயாராக வேண்டி இருந்தது. அதற்காக சென்னை செல்ல தயார் ஆனேன். மாணிக்கவாசகர் அய்யா வீட்டிற்கு சென்றேன் "அடடே... வா கிருஷ்ணா.. இப்ப தான் இந்த வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா???" என்று அவர் கேட்டதும் "அப்படி ஒன்னும் இல்ல அய்யா.. அப்பா கூட வயலுக்கு போய்ட்டேன். அதான் வந்து பாக்க முடியல.. தப்பா நெனச்சுக்காதீங்க.."

அய்யா எப்போதும் என்னை தன்மகனாகவே நினைத்தார். "அட.. உன்ன ஏன்ப்பா தப்பா நெனைக்கபோறேன். நீ என் புள்ள டா.. சரி.. எப்ப நாசா interview??"

"அய்யா... இந்த மாசம் 28 ஆம் தேதி சென்னைல நடக்குது. அதான் இப்பவே கெளம்பிட்டேன். போய் கொஞ்சம் படிக்கணும்." என்ற என் அருகே வந்து அய்யா என் தோளை தட்டி "நீ படிக்க என்னடா இருக்கு.. போ.. போய் சீக்கரம் நல்ல சேதி சொல்லு." என்றார்.

அய்யாவின் காலில் விழுந்து ஆசி பெற "நல்லா இருப்பா..!! நீ பட்ட கஷ்டம் எல்லாம் காணாம போச்சு. நீ ரொம்ப நல்ல நிலைக்கு வருவ" என்று கூறி தன் சட்டை பையில் இருந்து 500 ரூபாய் எடுத்து எனக்கு கொடுத்தார்.

"அய்யா.. இது எதுக்குய்யா.. உங்க அன்பே போதும் எனக்கு!!" என்ற என்னைப் பார்த்து "அட போடா... கை செலவுக்கு வெச்சிக்க..." என்று செல்லமாக என் கன்னத்தை தட்டினார். அங்கிருந்து வரும் வழியில் சந்தியாவிற்க்கும், அருணுக்கும், நான் வரும் தகவலை தொலைப்பேசியில் தெரிவித்து விட்டு வீட்டிற்கு வந்தேன்.

தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டு, புறப்பட தயார் ஆனேன். "ஏன்ய்யா... முறுக்கும், அதிரசமும் வெச்சிருக்கேன். சப்புட்டுக்கோ. இந்தா..... இந்த பணத்த கை செலவுக்கு வெச்சிக்க. நல்லபடியா போய் பரிட்சை எழுதுப்பா. ஊருக்கு போயிட்டு சாவித்ரி வீட்டுக்கு போன் போடு. நான் உன் போனுக்காக காத்துக் கெடப்பேன்ய்யா..." என்று கூறும் போது அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருகிற்று. "போன் பண்றேன் ஆத்தா. நீ கவலை படாம இரு" என்று ஆறுதல் கூறினேன்.

"காசு பணம் வேணும்னா போன் பண்ணு ராசா. அய்யன், ஆத்தாளுக்கு கஷ்டம்னு நெனச்சு வெறும் வயிறா கெடைக்காதய்யா.. என் நெனப்பு முச்சூடும் உன் மேல தானப்பா இருக்கும்" என்று கண் கலங்கிக் கொண்டிருந்த அம்மாவை பார்த்து அப்பா "ஏய்.. கிறுக்கு கழுத.. புள்ள ஊருக்கு போற நேரம் ஏன் அழுதுட்டு இருக்கவ. அவன் எல்லாம் பாத்துக்குவான். நான் போய் பஸ் வெச்சு விட்டுட்டு வாறேன்."

என் பெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு, என் தோளில் ஒரு கை வைத்து அணைத்த படி, நடந்துகொண்டே அப்பா "தம்பி..!! மெட்ராசு பெரிய ஊரு. நல்லவங்களும் இருப்பாங்க, கெட்டவங்களும் இருப்பாங்க. பாத்து சூதானமா இருந்துக்க. ஆமா..... யாரு தம்பி அது??? தெனம் நீ நம்ம முருகன் கடைல இருந்து ஒரு பொண்ணுக்கு போன் பண்றியாம். முருகன் சொன்னான்."

"வேலை கெடச்சதும் நானே சொல்லனும்னு நெனச்சேன். நீங்க கேட்டதுனால இப்பவே சொல்றேன். என் கூட படிச்ச புள்ளய்யா.. பாசக்கார புள்ள. என் மேல உசுரயே வெச்சிருக்கு. நானும்.........." என்று இழுத்தேன்.

"உனக்கு தெரியாததா தம்பி??? இங்க இருக்கறவங்க பத்தாவது கூட ஒழுங்கா முடிக்கல. ஆனா நீ, ஆச பட்ட படிப்புக்காகவும், வேலைக்காகவும் எப்படி கஷ்டப்பட்டனு தான் எனக்கு நல்லா தெரியுமே. நீ எத செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும். எங்கள விட படிப்புலையும், அறிவுலையும் நீ ஒசந்துக் கெடக்க.. நீ தப்பா எதையும் செய்யமாட்ட. கவல படாம போய்யா.. வேலை கெடச்சதும் எல்லாம் உன் ஆசப்படி பேசி முடிச்சிக்கலாம்." என்று கூறிய அப்பாவை வியந்து பார்த்தேன். என் மேல் அப்படி ஒரு நம்பிக்கை அவருக்கு.

"போய்யா... போ... வேலை கெடச்சதும் தகவல் சொல்லு" என்று கூறி என் சட்டை பையில் பணத்தை திணித்தார். பேருந்தில் ஏறி சென்னை புறப்பட்டேன்.

தொடரும் நேர்முகத் தேர்வுக்கான ஆயத்தம்.


என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Saturday, December 18, 2010

ஒரு லட்சியவாதியின் காதல் கதை - அத்யாயம்-10

என்ன ஒரு ஆனந்தம்...!!!!
என்ன ஒரு பரவசம்...!!!!
மகிழ்ச்சியின் உச்சத்தையே தொட்டுவிட்டதாய் ஓர் அற்புத உணர்வு.

இத்தனை நாள் என்னை காயப்படுத்திக்கொண்டு இருந்த என் உணர்வுகள், என்னை காற்றில் பறக்கச் செய்தது. கனவாய் களைந்து போகும் என்றிருந்த ஒன்றே இன்று கைசேர்ந்தது. அப்படியிருக்க, என் மூச்சாய் இருக்கும் லட்சியம் என்ன கிடைக்காமலா போய்விடும் என்ற ஓர் புது எண்ணம் என் தன்னம்பிக்கைக்கு வழு சேர்த்தது.

"சந்தியா..!! இது காலேஜ். முதல்ல அத கவனி. தப்பா நினைக்காத. மத்தவங்க தப்பா நினைக்கறதுக்குள்ள கொஞ்சம் விலகிக்கோ."

சூழ்நிலையை உணர்ந்த சந்தியாவும் சற்று நகர்ந்து அமர்ந்தாள். ஆனாலும் இருக்கப்பற்றிய என் கையை அவள் விடவில்லை. உனக்கான நேரத்தையும் இடத்தையும் விரைவிலேயே தருவேன் என்று என் பார்வையிலேயே அவளுக்கு உணர்த்தினேன்.

"சந்தியா..!! இத... இந்த காதல... உன்கிட்ட எப்படி சொல்றதுனு தெரியாம நான் பட்ட வேதனை எனக்கும் அருணுக்கும் தான் தெரியும். நீ என்ன தப்பா நெனச்சு விலகிட்டா என்ன பண்றதுன்னு நான் பயந்த உணர்வு, எனக்கு மட்டும் தான் தெரியும். என் வாழ்க்கைல ஒரு பொண்ணுனா, அது நீ மட்டும் தான். என்ன மட்டும் காதலிக்காம என் இலட்சியத்தையும் நீ நேசிச்ச பாரு, அந்த எண்ணத்துக்கு என்னை தவிர வேற என்ன தர முடியும் என்னால???" என்றதும் என்னை பார்த்த சந்தியா "இது ஏதோ சினிமா டயலாக் மாறி தெரியுதே.!!" என்று சிரித்தாள்.

"அருணுக்கு தெரியுமா இது??" என்றாள் ஆச்சரியமாக.
"ஊருக்கே தெரிஞ்சிருக்கு இத பத்தி. ஆனா நம்ம தான் பேசிக்கவே இல்ல." என்றதும் சட்டென்று சிரித்த சந்தியா "இத வெளிபடுத்த நாலு வருஷம் தேவ பட்டிருக்கு நமக்கு." என்று கூறி மீண்டும் சிரித்தாள். கள்ளம் கபடமின்றி சிரித்துக்கொண்டு இருக்கும் சந்தியாவை பார்த்துக்கொண்டே இருந்தேன். என் வாழ்வை அழகாக்கப் போகிறவள் அல்லவா...... இல்லை இல்லை..... அழகாக்கிக்கொண்டிருப்பவள் அல்லவா. அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த என்னை கவனித்த சந்தியா "எப்ப டா என்ன கல்யாணம் பண்ணிக்க போற???" என்றாள் ஏக்கமாக. சில நிமிடம் மௌனமாக இருந்து யோசித்தேன். என் சிந்தனைக்கு வழி வகுத்து சந்தியாவும் இதையே யோசித்துக்கொண்டிருந்தாள்.

"செப்டம்பர் ல interview. நிச்சயம் நான் select ஆயிடுவேன். டிசம்பர் ல joining. போய் 1.5 வருஷம் எப்படி இருக்குனு பாக்கறேன். அப்பறம் வந்து marriage பண்ணிக்கறேன். நீயும் MBA முடிக்கணும் இல்ல.??" என்றதும் ஏக்கமாக பார்த்த சந்தியா "அவளோ நாளா????... ம்..... நீயும் settle ஆகணும்ல.... correct தான்... நான் ஒன்னும் MBA concentrate பண்ணி படிக்கப்போறது இல்ல. எப்படியும் நீ marriage முடிஞ்சதும் என்ன US கூட்டிட்டு போய்டுவ... அப்பறம் என்ன...??? அப்பா தான் பாவம். நான் MBA முடிச்சு அவருக்கு business ல help அ இருப்பேன்னு நம்பிட்டு இருக்கார். இது மட்டும் அவருக்கு தெரிஞ்சுது, அப்பறம் அவருக்கு 2nd heart attack ஏ வந்திடும்." என்று சிரித்தாள். காதலை பரிமாறிக்கொண்ட நிறைவு இருவருக்கும். சிரித்துக்கொண்டே இருந்தோம் வெகு நேரம்.

அருண் வருவதை பார்த்த சந்தியா, மெல்ல தன்கையை என் கைமேல் இருந்து எடுத்துக்கொண்டாள். "வந்துட்டாண்டா வில்லன். கொஞ்ச நேரம் தனியா விடறானா பாரு உன் friend." என்று சலித்துக்கொண்டாள் சந்தியா. கையில் paper உடன் வந்த அருண் எங்கள் முகத்தில் தெரிந்த தெளிவையும் மகிழ்ச்சியையும் பார்த்துக் கேட்டான் "என்ன டா... ரெண்டு பேர் face உம் ரொம்ப bright அ இருக்கு... நான் போயிட்டு வந்த gap ல என்ன நடந்தது.???? உண்மை ய சொல்லு..." இருநொடி மௌனத்திற்கு பிறகு மீண்டும்... "ரெண்டு பேரும் full plate chicken briyani வாங்கி செமகட்டு கட்டுன மாறி தெரியுதே..." என்றான் அருண். மூவரும் சிரித்துவிட்டோம்...

மீண்டும் ஒரு சிறு இடைவெளியில் அருண் "நான் இல்லாத நேரம் உங்களுக்கு அவ்வளவு சந்தோஷம்.?? ம்.... இருக்கட்டும்.... ஆமா சந்தியா... ஏதோ பெருசா சாதிச்ச மாறி தெரிற.. என்ன விஷயம்????" என்றான். லேசாக அருணை முறைத்து பார்த்து சிரித்தாள் சந்தியா. அருண் என்னை பார்த்து "மச்சான்..!! நீ கூட வெக்கப்படற மாறி தெரியுதே..!!!" என்றான். வேகமாக நான் எழுவதை பார்த்து ஓட ஆரம்பித்தான் அங்கிருந்து. நானும் அவனை துரத்த... சந்தியாவிற்கு அப்படி ஒரு சிரிப்பு. மனம் விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக ஓடிக்கொண்டிருந்த அருண், சந்தியா அருகே சென்று paper ஐ அவளிடம் கொடுத்துவிட்டு basket ball court இன் ஓரத்தில் இருந்த பந்தை எடுத்துக்கொண்டு ஓட, நானும் அவனிடம் இருந்து பந்தை பறித்து shoot செய்ய... சந்தியா எழுந்து நின்று கை தட்டினாள். அருணுக்கு வந்ததே கோவம். பந்தை எடுத்துக் கொண்டு வந்த என் கையில் இருந்த அதை தள்ளி விட்டு, என் கழுதை பிடித்து நெருக்கினான் விளையாட்டாக. அதை கண்ட சந்தியா, அருகில் இருந்த கல் ஒன்றை எடுத்து அருணை தாக்க ஓடி வந்தாள்.

சந்தியாவை பார்த்த அருண் என் பின்னால் ஒளிந்துகொண்டான். சந்தியாவின் கையில் இருந்த கல்லை நான் பிடுங்கிக்கொள்ள, அருண் "டேய்.. உன் உயர் நண்பனோட உயிருக்கே ஆபத்து வருது பாரு.. நான் சொன்னேன்ல. சந்தியா உன்மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்கானு பாரு." என்றான். "ஆமாம் டா... அவ என்மேல உயிரையே வெச்சிருக்கா. இப்ப தான் அத என்கிட்ட சொன்னாள்."

என் தோளில் கை வைத்து அணைத்தபடி அருண் கூறினான் "இதுக்காக தான் உங்கள தனியா விட்டுட்டு சார் கூட போனேன். anyway Congrats..!!!" சந்தியா முகத்தில் வெக்கம் கலந்த சிரிப்பு. அருண் என்னை அணைத்து நின்றுகொண்டிருப்பது சந்தியாவிற்கு பொறாமையை கிளப்பியது. பெண்களுக்கே உரித்தான குணம் அல்லவா அது. அருணை முறைத்துப் பார்த்து சொன்னாள் "சரி.. சரி... உயிர் நண்பன்னு சொல்லி, எங்க marriage க்கு அப்பறம் அடிகடி வீட்டுக்கு வந்து எங்க உயிரை எடுக்காத....". இதை கேட்ட அருண் சிரித்துக்கொண்டே சொன்னான் "நான் ஏன் உங்க வீட்டுக்கு வரேன்.?? நீங்க US ல ஒரே இடத்துல்ல தான் இருக்கணும். ஆனா நான் உலகம் full அ பறந்துட்டு இருப்பேன்."

நேரம் ஆனது. விடைபெறும் தருவாயும் வந்தது. மூவரும் மீண்டும் அமர்ந்தோம். "மச்சான்.. உனக்கு செப்டம்பர் ல தான interview. அதுவரைக்கும் என்ன பண்ணபோற.???" என்றான் அருண். "நான் ஊருக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு. அம்மா அப்பா கூட கொஞ்ச நாள் இருந்துட்டு அப்பறம் சென்னை வரேன்" என்றேன். "டேய்.. pilot training time ல நான் அங்க தான் தங்கணும். week-end தான் வீட்டுக்கு வர முடியும். so நீ என் relative ரூம்ல தங்கிக்க. அவன் ஊர்ல இருந்து சென்னைக்கு படிக்க வந்திருக்கான். தனியா தான் தங்கி இருக்கான்." என்றான் அருண். சரி என்று நானும் சம்மதித்தேன். மீண்டும் சந்திக்கும் நாளை முடிவு செய்துவிட்டு மூவரும் விடை பெற்றோம்.

எனக்கு உயிரான காதலியும் இருக்கிறாள், சிறந்த நண்பனும் இருக்கிறான், மிகச்சிறந்த வேலையும் கிடைக்கப்போகிறது. என்னை விட அதிர்ஷ்டசாலி வேறு யார் இருக்க முடியும் என்ற எண்ணம் எனக்குள் கர்வத்தை புகுத்தியது. சிறுவயதில் கண்ணுக்கு தெரிந்த பிரச்சனைகள் அனைத்தும் மறைந்துகொண்டே போவதை நன்றாக என்னால் உணர முடிந்தது.
பெருமிதத்தில் நான் நடக்க ஆரம்பித்தேன்.

தொடரும் இளைப்பாறிய நாட்கள்....

என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Monday, December 13, 2010

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-9


கல்லூரியின் இறுதி நாட்கள்.

பிரியப்போகிற வருத்தம் எல்லோர் மனதிலும் அடர்ந்து கிடந்தது. இறுதி தேர்வினை முடித்து விட்டு விடைபெறும் தருவாயும் வந்தது. கல்லூரியில் நாங்கள் திரிந்த அத்தனை இடங்களுக்கும் போய் பார்த்துக்கொண்டிருந்தோம் நானும், அருணும், சந்தியாவும்.

நாங்கள் வழக்கமாக விளையாடும் basket ball court ல் நாங்கள் மூவரும் அமர்ந்திருந்தோம். பேச எங்களுக்கு வார்த்தைகள் இல்லாமல் தடுமாறிக்கொண்டு இருந்தோம். என் உயிரான இருவரும் என் இருபுறமும் அமர்ந்திருக்க, இதுபோன்று ஒரு சந்தர்ப்பம் மீண்டும் எப்போது கிடைக்கும் என்ற எண்ணம் என்னை வாட்டி எடுத்த வேளையில், சந்தியா அருணை பார்த்து "அடுத்து உன் plan என்ன அருண்?" என்றாள். பழைய இனிமையான நாட்களை அசை போட்டுக்கொண்டிருந்த அருண், சந்தியாவை பார்த்து "Pilot training போகணும். அப்பா application வாங்கி வெச்சிருக்கார். சென்னை ல தான் training. 8 மாசம். அப்பறம் ஒரு exam எழுதனும். Exam marks அ பொருத்து zone allocate பண்ணுவாங்க. 2 வருசத்துல co-pilot chance கிடைக்கும். அப்புறம் என்ன life settle தான். நீ MBA apply பண்ணிட்டியா சந்தியா?" என்றான்.

"ம்..... நானும் சென்னை ல தான் 3 college ல apply பண்ணியிருக்கேன். அப்பா அங்கயே இருக்க சொல்லிட்டார். நீ என்ன பண்ணபோற கிருஷ்ணா!! உன்ன பிரிஞ்சு நான் எப்படி இருக்கப்போறேன்னு எனக்கே தெரியல" என்ற சந்தியா அருண் இருப்பதை உணர்ந்து, "உங்க எல்லாரையும் miss பண்ண போறேன்" என்றவள் முகம் வாடிப்போனது. அருண் என் காதோரம் வந்து "பாரு டா.. உன் மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்கா... நிச்சயம் அவ உன்ன காதலிக்கறா" என்றான். அருண் என்ன கூறினான் என்று சந்தியா என்னிடம் கேட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் ஜான் சார் அங்கு வந்தார்.

"கிருஷ்ணா, உன்ன எங்கெல்லாம் தேடுறது....!! உன் கனவு நிறைவேற போகுது. NASA இந்த வருஷம் இந்தியா ல இருந்து 35 junior designers அ recruit பண்ண போறாங்க செப்டம்பர் கடைசி ல. டிசம்பர் ல joining. காலேஜ் க்கு invitation வந்திருக்கு best students அ அனுப்ப சொல்லி. உன்ன principal லே refer பண்றேன்னு சொல்லிருக்கார்."

எங்கள் அனைவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. அருண் ஜான் சார் ஐ பார்த்து "எங்க சார் interview?" என்றான் மிகுந்த ஆர்வத்துடன். "சென்னை ல ஒரு star ஹோட்டல் ல நடக்க போகுது. ஹோட்டல் பெயர் ஞாபகம் இல்ல. நீ என்கூட வா. Circular அ தரேன். photocopy எடுத்துட்டு திருப்பி குடு." என்றார் ஜான் சார். என்னை விட சந்தியவிற்க்கும், அருணுக்கும் அதிக மகிழ்ச்சி. அருண் என்னை பார்த்து "டேய் மச்சான்..!! நீங்க 2 பேரும் இங்கயே இருங்க. நான் சார் கூட போய் notice அ வாங்கிட்டு வரேன். நீங்க முக்கியமா எதாச்சும் பேசணும்னா பேசுங்க. நான் சீக்கிரம் போயிட்டு லேட் அ வரேன்" என்றான் என்னை பார்த்து கண் அடித்து, தலையை ஆட்டி.

எங்களுக்கு தனிமை கிடைத்தது. இருந்தபோதும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சந்தியாவின் கால்கள் அருகே சில சொட்டு நீர் துளிகள் விழுந்து கொண்டிருப்பதை கண்ட நான் சட்டென்று சந்தியாவின் முகத்தை பார்த்தேன். அவள் கண்கள் குளமாகி இருந்தது. "என்ன சந்தியா... ஏன் அழற" என்றேன் தயங்கியபடியே.

"கஷ்டமா இருக்கு கிருஷ்ணா. இந்த 4 வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. எப்பவும் நீ என்கூடவே தான் இருந்திருக்க. இனி நீ இல்லாம எப்படி life இருக்கும்னு நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. அழுகை ய அடக்கவே முடியல. உனக்கு முன்னாடி அழக்கூடாது னு நெனச்சு தான் வந்தேன். ஆனா........." என்றவள் கண்களில் கண்ணீர் பெருகிக்கொண்டே போக, அவள் என் கையை பற்றிக்கொண்டாள். அவளது ஸ்பரிசம் என்னையும் சற்று கலங்க தான் வைத்தது. நான் அதை காட்டிக்கொள்ளாமல் "NASA interview சென்னை ல தான. அதுவரைக்கும் நான் அங்க தான் இருபேன். உன்ன அடிக்கடி வந்து பாக்கறேன்." என்று ஆறுதல் கூறினேன்.

"ம்....... அது OK. ஆனா........" என்று இழுத்த சந்தியா "டிசம்பர் ல என்ன விட்டுட்டு நீ NASA போய்டுவ. நான் என்ன பண்றது அப்ப." என்ற அவளது விழிகளில் ஒரு ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு இருப்பது எனக்கு நன்றாகவே புரிந்தது. "சரி. நீயும் வா என்கூட. நான் உனக்கு visa எடுக்குறேன்." என்று கூறியது தான் தாமதம். கலங்கிய விழிகளும், புன்னகைத்த உதடுகளுமாய் கேட்டாள் சந்தியா "என்ன visa எனக்கு எடுப்ப???" என்று. வார்த்தை இன்றி தவித்துக்கொண்டிருந்த என்னை பார்த்து சந்தியா "எனக்கு dependant visa எடுத்து தரியா??" என்றாள் மிக மெல்லிய குரலில். மறைமுகமாக தன் காதலை சந்தியா சொல்லுவது எனக்கு பரவசத்தை கொடுத்தாலும், பயமும் குழப்பமும் என்னை சுழற்றி அடித்துக்கொண்டிருந்த வேளையில், என் தயக்கத்தை உணர்ந்த சந்தியா "கடைசியா என்னையே சொல்ல வெச்சிட்ட..!! சரி நமக்குள்ள என்ன...
I LOVE U KRISHNA.
நீ இல்லாம இனி எனக்கு வாழ்க்கை இல்ல"
என்று கூறி என் தோளில் சாய்ந்தாள்.


தொடரும் காதல் பரிமாற்றம்......

என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Sunday, December 5, 2010

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-8

சந்தியாவை தவிர்க்கவும் பிரியவும் எனக்குள் நானே தயார் ஆகிக்கொண்டிருந்த நேரம் அது. குழப்பமான சூழ்நிலையில் செய்வதறியாது திரிந்து கொண்டிருந்தேன்.


என் இந்த செய்கைகளை கண்டு சற்று பயந்துபோன அருண் "என்ன மச்சான் ஆச்சு!! நானும் உன்ன காலை ல இருந்து பாக்கறேன், பைத்தியம் புடிச்சவன் மாறி இங்கயும் அங்கயும் போற. சாப்பிட கூட இல்ல. என்ன பிரச்சனைன்னு சொல்லு டா.... நான் உன் friend தான..!!" என்றான்.

மனதில் அடக்கி வைத்துக்கொண்டிருந்த அத்தனையும் கண்ணீராய் வெளிவந்தது அருண் கேட்ட மாத்திரத்தில். அருண் என் ஒரே நண்பன். மிக அதிக பக்குவம் உள்ளவன். "அழு... நல்ல அழு.... அழுதா தான் துக்கம் குறையும்" என்றவன் என்னை இறுக்கி அணைத்துக்கொண்டான். என் வேதனையை குறைக்க அவன் எனக்கு கூறிய அறிவுரைகள், என்னை பக்குவபடுத்த துவங்கியது. நேரம் ஆக ஆக என் மனதின் பாரம் குறைய துவங்கியது. லேசான தெளிவு என் முகத்தில் தென்பட, "இப்ப சொல்லு... என்ன பிரச்சனை??" என்றான் அருண்.

இத்தனை நாள் எல்லோர் மனதில் சந்தியவிற்க்கும் எனக்கும் இடையே காதல் தான் என்ற எண்ணம் இருந்த நிலையில், அன்று தான் முதல் முறையாக என் காதலை நான் வெளிப்படுத்தியது. சந்தியாவிடம் அல்ல, என் உயிர் நண்பனிடம். பெருமூச்சு விட்டபடி "இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான் டா. நீயா சொல்லற வரைக்கும் கேக்காம இருப்பது நாகரிகம் னு நெனச்சு தான் இதுவரைக்கும் நான் கேக்கல" என்ற அருண் என்னை அணைத்தபடியே கேட்டான் "சரி..!! இப்ப என்ன problem அதுல.. உங்க ரெண்டு பேருக்கும் நல்ல understanding இருக்கு.. நல்ல பொருத்தமும் தான். அப்பறம் என்ன??? சந்தியா என்ன சொல்றா?"

மெல்லிய குரலில் "அவளுக்கும் எனக்கும் இது ஒத்துவரும்னு எனக்கு தோணலை.... அவ status என்ன??, family, caste னு பல problem இருக்கு. அவ என்ன எப்படி நெனச்சு பழகிட்டு இருக்கானு தெரியல.... இதெல்லாம் யோசிச்சு தான் இந்த காதல இப்படியே விட்டரலாம்னு நெனச்சேன். ஆனா என்னால முடியல.. நாளைக்கு இந்த நினைப்போட காலேஜ் ல அவ முகத்த எப்படி பாக்கறது னு தெரியல. கண் கலங்காம இருக்க முடியுமா னு கூட தெரியல..." என ஆரம்பித்த என்னை நிறுத்திய அருண் "எனக்கு தெரிஞ்சு அவ உனக்கு ஒரு நல்ல friend. Friend னு நெனச்சு நீ எத்தனை நாள் வேணும்னாலும் பழகலாம். ஆனா காதல் வந்தா அப்படி பழகறது கொஞ்சம்.. ம்.ம்.... இல்ல… இல்ல… ரொம்பவே கஷ்டம் தான். எனக்கென்னமோ அவளும் உன்ன காதலிக்கிறா னு தான் தோணுது. அவ செஞ்ச help எல்லாம் வெறும் நட்புக்காக மட்டும் செஞ்ச மாறி தெரியல, நான் வேணும்னா அவ கிட்ட லேசா கேட்டு பாக்கவா???" என்றான்.

"டேய்!! அவ கிட்ட கேக்கறது ஒன்னும் பெருசில்ல.
அவ இல்லைன்னு சொன்னாலும் எனக்கு தான் பிரச்சனை.
ஆமாம் னு சொன்னாலும் எனக்கு தான் பிரச்சனை."
என்ற என்னிடம் சட்டென்று கேட்டான் அருண் "அவ இல்லைன்னு சொன்னா உனக்கு வேதனை தான் மிஞ்சும். அது எனக்கு நல்லா புரியுது. ஆனா ஆமாம் னு சொன்னா என்ன பிரச்சனை உனக்கு??? அது தான் எனக்கு புரியல...."

"என் தகுதி, அந்தஸ்த்து, ஜாதி னு பல விஷயம் இருக்கு" என மீண்டும் நான் ஆரம்பிக்க, என் சட்டையை இழுத்து பிடித்து அருண் "என்ன டா தகுதி உனக்கு இல்ல??? நீயும் Aero படிக்கிற, NASA ல போய் சேர போற. உன்னால இந்தியாவுக்கே பெருமை சேர போகுது. இத விட வேற என்ன தகுதி உனக்கு வேணும்??? அந்தஸ்தா? டேய், நீ NASA க்கு போனதுக்கு அப்பறம் சந்தியா வீட்ல தான் அத பத்தி கவலை படனும். என்ன டா ஜாதி?? எங்க இருந்து வந்தது ஜாதி?? எந்த காலத்துலையோ மக்களே உருவாக்குனது டா.. நீ என்ன ஜாதி னு நான் உன்ன கேட்டிருப்பேனா? இல்ல நான் இந்த ஜாதின்னு நீ தான் பொருட்படுத்தி இருப்பியா??? அதெல்லாம் போன generation ஓட முடிஞ்சுது. நீ ஏன் அத பத்தி worry பண்ற???" என்றான்.

அருணுக்கு விளக்க முற்பட்டேன். "அருண், நமக்கு அந்த ஜாதி வேறுபாடு இல்ல. ஆனா சந்தியா parents அத எதிர்பார்ப்பாங்க இல்ல?? எங்க சொந்தபந்தங்கள பத்தி எனக்கு கவலை இல்ல. நாங்க கஷ்ட பட்டப்ப ஒருத்தனும் உதவிக்கு வரல. நான் படிக்கவே மாணிக்கவாசகர் அய்யா தான் உதவினார்." என்ற போது மீண்டும் என் கண்கள் கலங்கின.

"உன் கஷ்டம் எனக்கு தெரியும் டா. ஆனா இப்போ உன் நிலமை மாறிட்டு இருக்கு. நீ சீக்கிரம் நல்ல நிலைக்கு வர போற.." என்று என்னை தேற்றிய அருண் "நீ சொல்றதும் correct தான். அவங்க ஜாதி பாக்கலாம். ஆனா உன் தகுதி பல மடங்கு உயர்ந்திரும் NASA ல சேர்ந்ததும். சந்தியா அப்பாவுக்கு நல்ல தெரியும் NASA பத்தியும், உன் லட்சியத்த பத்தியும், நீ ஜெயிச்ச அப்பறம் அவரே உனக்கு பொண்ணு குடுக்க ஆசை படுவார். இப்ப நீ அத பத்தி எல்லாம் யோசிச்சு கவலை படாத. காலேஜ் life முடியபோகுது. இனி நம்ம கனவை நிறைவேதுற வேலை ய பாப்போம். சந்தியா உனக்கு தான். நீ வேணும்னா பாரு. ஒரு நாள் நீயும் சந்தியாவும் US போக போறீங்க. அந்த fight அ நான் தான் ஓட்ட போறேன்." என்ற அருணின் வார்த்தைகள் எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது. இந்த காதலை பற்றியெல்லாம் நினைக்காமல் முதலில் கனவை அடைய முடிவெடுத்தேன். மறுநாள் காலை கல்லூரியில் சந்தியாவை பார்த்தபோது எந்தவித தயக்கமும் இல்லை எனக்கு. அப்படி என் மனதை பக்குவப்படுத்தியது என் நண்பன் தான். எத்தனை பேருக்கு வாய்த்திடும் இப்படி ஒரு நண்பன்...???

தொடரும் கல்லூரியின் கடைசி நாட்கள்.....


என்றும் அன்புடன்,


இராஜராஜன்